குறுந்தொகை - பாடல் 27

A Sangam poem where the heroine laments her wasted beauty during separation. She compares it to milk that serves no purpose - neither drunk by calves, nor stored, nor given to the good, just spilled on the ground. The verse explores the nuanced difference between திதலை (beauty marks of flourishing) and பசலை (pallor of withering).

குறுந்தொகை - பாடல் 27

சங்க இலக்கியத்தின் இந்தப் பாடல், தலைவன் பிரிந்து சென்ற காலத்தில் தலைவி தன் அழகு வீணாவதை வருந்தி கூறும் நுட்பமான உணர்வுகளைச் சித்தரிக்கிறது.

கன்றும் உண்ணாது கலத்தினும் படாது

27. பாலை - தலைவி கூற்று

கன்று முண்ணாது கலத்தினும் படாது
நல்லான் தீம்பால் நிலத்துக் காஅங்
கெனக்கு மாகா தென்னைக்கு முதவாது
பசலை உணீஇயர் வேண்டும்
திதலை அல்குலென் மாமைக் கவினே.

குறுந்தொகை - 27 பாடியவர் - வெள்ளிவீதியார்

சந்தி பிரித்து எழுதிய பாடல்

"

கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
நல் ஆன் தீம்பால் நிலத்து உக்காஅங்கு
எனக்கும் ஆகாது என் ஐக்கும் உதவாது
பசலை உணீஇயர் வேண்டும்
திதலை அல்குல் என் மாமைக் கவினே

தலைவியின் கூற்று – "பிரிவிடை ஆற்றாள்" எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி[1] உரைத்தது.

கருத்து: தலைவன் பிரிந்து சென்றதால் புணர்ச்சிக்கு ஏங்கும் தலைவி, தன் அழகு எவருக்கும் பயன்படாமல் வீணாவதை ஒரு சக்திவாய்ந்த உவமையால் வெளிப்படுத்துகிறாள்.

கன்று குடிக்காமலும், பாத்திரத்தில் சேமிக்கப்படாமலும், தரையில் சிந்தப்படும் ஆவின் இனிய பால் எவ்வாறு வீணாகிறதோ, அதேபோல் எனக்கும் பயன்படாததாகவும், என் காதலனுக்கும் உதவாததாகவும், பசலை தின்று தொலைக்க விரும்பும் திதலை கொண்ட அல்குலையுடைய என் மேனியின் அழகும் வீணாகிறது.

இங்கே தலைவி தானே தன் நிலையைச் சொல்கிறாள். தலைவனின் பிரிவால், காதலால் உருவான அழகிய உடல் மாற்றங்கள் (திதலை), பிரிவின் வருத்தத்தால் வரும் வெளுப்பால் (பசலை) மூடப்படுவதை வேதனையுடன் கூறுகிறாள்.

சொற்களஞ்சியம்

கன்று - கன்றுக்குட்டி
நல் ஆன் தீம்பால் - நல்ல பசுவின் இனிய பால், 'ஆன்' என்பதற்கு பதில் 'ஆண்' என்று எழுதி இருந்தால் பாடல் பிழையாகிப் போயிருந்து இருக்கும். 'ஆ' என்ற ஓரெழுத்துச் சொல்லுக்கு பசு என்று பொருள். அதனால்தான் ஆயர் என்பவர்கள் பசுக்களை மேய்ப்பவர். ஆயர்பாடி என்றால் ஆயர்கள் வாழும் இடம். தெலுங்கில் இன்றும் மாட்டுப்பாலுக்கு 'ஆவு பாலு (ఆవు పాలు)' என்று பெயர்.
கலத்தினும் படாது - பாத்திரத்தில் சேர்க்கப்படாமல்
நிலத்து உக்கா அங்கு[2] - தரையில் வீணே வழிந்து ஓடுவதைப் போல (உக்காங்கு என்று பாடலில் வரும்; உக்காஅங்கு என்று பாடலில் அளபெடுத்து[3] வருவது தளை தட்டாமல் இருக்க)
எனக்கும் ஆகாது - எனக்கும் பயன்படாது
என் ஐக்கும் உதவாது - 'ஐ' என்ற எழுத்துக்கு தலைவன், அரசன் என்ற பொருள் உண்டு. "என் ஐக்கும் உதவாது" என்றால் என் தலைவனுக்கும் உதவாது என்று பொருள்
பசலை உணீஇயர் வேண்டும் - 'பசலை என்னை உண்கிறது'. சங்ககாலப் பாடல்களில் 'பசலை' என்ற சொல் அதிகம் பயன்படுத்தப் படுகிறது. தமிழரின் முக்கனிகளில் முதன்மையானதான மாம்பழத்தின், மரத்தின் இலைகள், கொழுந்தாக இருக்கும் போது சிகப்பும் பச்சையும் கலந்து இருக்கும். ஆனால் முற்றிப் போன பின், முதிர்ந்த பின் பச்சையாக மாறி விடும். காதலர்கள் பிரியும் போது பெண்ணுக்கு உடல் முதிர்ச்சி அடைவதையும், அவள் வாடுவதையும் 'பசலை' என்ற சொல் குறிப்பதாக தமிழாசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
உணீஇயர் - தின்று, உண்ண
வேண்டும் - விரும்பும்
அல்குல் - பெண் உறுப்பு, இடுப்பு, அடிவயிறு
அல்குல் என் - அல்குல் உடைய
மாமை - மாந்தளிர் / மாம்பிஞ்சு (மேனி)
கவின் - அழகு

English Translation

📖 Translation

The heroine speaks to her friend who noticed her inability to bear the separation: Like sweet cow's milk that is neither drunk by the calf,
nor stored in vessels,
but simply spilled on the ground—
so too is the beauty of my body
with its flourishing marks now consumed by pallor,
serving neither me nor my beloved.

The heroine herself speaks here, using the powerful metaphor of wasted milk. The tragedy lies in the contrast between திதலை (thithalai) and பசலை (pasalai)—two kinds of skin changes with opposite meanings.

Thithalai refers to the golden, shimmering skin changes that occur when a woman's body flourishes with love and desire. These are beautiful marks that appear on the skin as it expands with happiness—on the breasts, shoulders, and lower abdomen. They are signs of feminine beauty and vitality, celebrated by lovers.

Pasalai, in contrast, is the pallor[4] that appears when the body withers from separation and longing. It's the pale discoloration that comes from emotional suffering, not from illness.

The verse's profound sadness comes from this reversal: the beautiful marks of love's flourishing (thithalai) are now being consumed and covered by the pallor of separation (pasalai). The body that bloomed with union now withers in absence.

இலக்கிய அழகியல்

இந்தப் பாடலின் தனிச்சிறப்பு அதன் உவமை நயத்திலும், சொல் நுட்பத்திலும் அடங்கியுள்ளது. பால் என்பது தமிழ் இலக்கியத்தில் தூய்மை, இனிமை, வளம் ஆகியவற்றின் அடையாளம். அதுவே எந்தப் பயனுமின்றி வீணாவது போல், தலைவியின் அழகும் வீணாவதை வேதனையுடன் சுட்டிக்காட்டுகிறாள்.

திதலை - அழகின் அடையாளம்

திதலை[5] என்பது உடல் மலர்ச்சியின் அடையாளம். பெண்ணின் உடல் காதலால், உவகையால் வளரும்போது தோலில் உருவாகும் பொன்நிறத் தகட்டைப் போன்ற மினுக்கமான நிறமாற்றங்கள். இவை குறிப்பாக மார்பு, தோள்கள், அடிவயிறு (அல்குல்) போன்ற இடங்களில் தோன்றும். இது நோயின் அறிகுறி அல்ல, பெண்மையின் அழகின் இயற்கையான வெளிப்பாடு.

அகநானூற்றில் பரணர் திதலை மாமை தளிர்வனப்பு என்று தெளிவாகவே சொல்கிறார் - திதலை கொண்ட மேனியின் தளிர் போன்ற அழகு என்று.

"

திதலை உலாத்து பொற்களபம் விடா புதுத்
திரிவித கடாக்களிற்று உரகோடு

— திருப்புகழ்

திருப்புகழில் அருணகிரியார் யானை மருப்பு போன்ற முலையை திதலை எனும் பொற்களபம் பூசிய என்று குறிப்பிடுகிறார்.

பசலை - பிரிவின் வெளுப்பு

பசலை என்பது மெலிவதால் வரும் நிறமாற்றம். "பசத்தல்" என்னும் வேர்ச்சொல் "வெளிறுதல்" என்று பொருள்படும். காதலன் பிரிந்ததும், உடல் மெலிந்து தோலில் வெளுப்பு தோன்றுவது. இது உடல்நலக் குறைவு அல்ல, மனதின் ஆழமான துயரத்தின் உடல்ரீதியான வெளிப்பாடு.

இரண்டும் பார்வைக்கு ஒரே மாதிரியான நிறமாற்றங்களாகத் தோன்றலாம், ஆனால் அவை எதிர்த்தன்மை கொண்டவை:

  • திதலை = வளர்ச்சியின் அடையாளம், மகிழ்ச்சியின் குறி
  • பசலை = சுருக்கத்தின் அடையாளம், வருத்தத்தின் குறி

அல்குல் - பெண்மையின் மையம்

அல்கு-தல் = குறுகு-தல் என்று பொருள்.

  • அல்கு - இருள்/ இரவு! (ஒரு நாளின் "கீழ்ப்" பகுதி)
  • அல்கு - சேர்தல் ("கீழான" பகுதியில் அல்லவா நீர் சேரும்)

ஆக, அல்கு-தல் → குறுகு-தல்/ கீழே
பெண்ணின் உடம்பிலே, கீழான, அல்கிய (குறுகிய) இடம் = அல்கு-ல்!

அல்குல்[6] என்பது இடை, அடிவயிறு, அதற்கும் கீழே, பெண்குறி ஆகிய பகுதியைக் குறிக்கும். இது பெண்மையின் மையமான இடம். காதலால் பெண்ணின் அல்குல் வளர்வது பற்றி பழம்பாடல்கள் நிறைய பாடியுள்ளன. கம்பன் வாம மேகலையுள் வளர்ந்தது அல்குலே என்று குறிப்பிடுகிறார்.

இந்தப் பாடலில் மிக நுட்பமான எதிர்வு:

பசலை உணீஇயர் வேண்டும்
திதலை அல்குல் என் மாமைக் கவினே

உவகையால் வளர்ந்து திதலை கொண்ட அல்குலில் இப்போது பசலை பாய்ந்து அழகை உண்டு தொலைக்கிறது. இரண்டு சொற்களும் எதிரீடாக அமைந்திருப்பதன் நுட்பத்தை உணரவேண்டும்.

தலைவியின் குரல்

இந்தப் பாடலில் குறிப்பிடத்தக்கது, தலைவி தானே பேசுகிறாள். தோழி அல்ல. தன் உடலின் மாற்றங்களை, அழகின் வீணான நிலையை தானே வெளிப்படுத்துகிறாள். "எனக்கும் ஆகாது, என்னைக்கும் உதவாது" என்று தன் காதலனையும் குறிப்பிடுகிறாள்.

இது காதலின் உடல்ரீதியான, உணர்வுரீதியான பரிமாணங்களை நேரடியாகப் பேசும் துணிச்சல். காதலன் பிரிந்த கணமே பசலை வந்து மூடியது என்பது உருவகமாக மட்டுமல்ல, உடலியல் உண்மையாகவும் கருதப்பட்டது சங்க காலத்தில்.

புலவரை பற்றி

வெள்ளிவீதியார் சங்க காலத்தில் வாழ்ந்த புகழ்பெற்ற பெண்பால் புலவர்களுள் ஒருவர். பிரிந்து சென்ற தன் கணவரைத் தேடி அலைந்த தனது சொந்த வாழ்க்கை அனுபவங்களையே இவர் பாடல்களாக வடித்துள்ளார் என உரையாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். சங்ககாலப் புகழ்பெற்ற ஔவையார் தனது அகநானூற்றுப் பாடலில் (அகம் 147) இவரைப் பற்றிக் குறிப்பிட்டுப் பாராட்டியுள்ளார்.

"

நெறிபடு கவலை நிரம்பா நீளிடை வெள்ளிவீதியைப் போல நன்றும் செலவு அயர்ந்திசினால் யானே!

— ஔவையார் (அகநானூறு 147)

இலக்கியப் பங்களிப்பு

சங்கத் தொகை நூல்களில் மொத்தம் 13 பாடல்கள் இவரால் பாடப்பட்டவை எனப் பொதுவாகக் கொள்ளப்படுகிறது.

  • குறுந்தொகை: 8 பாடல்கள் (27, 44, 58, 130, 146, 149, 169, 386)
  • நற்றிணை: 3 பாடல்கள் (70, 335, 348)
  • அகநானூறு: 2 பாடல்கள் (45, 362)

பெயர்க்காரணம்

மதுரையில் உள்ள "வெள்ளியம்பல வீதி" பகுதியில் வாழ்ந்ததால் இவர் வெள்ளிவீதியார் என்று அழைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.

பாலைத் திணை

பாலை என்பது சங்க இலக்கியத்தின் ஐந்து திணைகளில் ஒன்று. இது பாலை நிலத்தை (பாலைவனம், வறண்ட நிலம்) குறிக்கும். பிரிவு, பயணம், இடர்ப்பாடு, நீர்வற்றிய நிலம் ஆகியவை இத்திணையின் முக்கிய கூறுகள்.

இந்தப் பாடலில், தலைவன் பிரிந்து சென்றதால் தலைவியின் வாழ்வும் ஒரு பாலை நிலமாக மாறியுள்ளது. வளம் இழந்த நிலம் போல அவள் உடலும் அழகை இழக்கிறது. பாலின் உவமை இதை மிகச் சரியாகப் பிடிக்கிறது - தேவையான இடத்தில் இல்லாத வளம் வீணாகிறது.

நிறைவுரை

இந்தப் பாடல் காதலின் உடல்ரீதியான, உளவியல்ரீதியான ஆழத்தை நுட்பமாகச் சித்தரிக்கிறது. திதலை மற்றும் பசலை என்ற இரண்டு எதிர்நிலை சொற்களை ஒரே வரியில் இணைத்து, காதலின் இரு முகங்களை - இணைவின் மலர்ச்சியையும், பிரிவின் வாட்டத்தையும் - ஒரே மூச்சில் உணர்த்துகிறது.

பாலின் உவமை வெறும் கவித்துவ அழகுக்காக மட்டுமல்ல. அது தலைவியின் வேதனையை, அவளின் அழகு எவ்வளவு விரைவாக வீணாகிறது என்பதை, எவ்வளவு முக்கியமற்றதாக ஆகிவிட்டது என்பதை வலியுறுத்துகிறது.

வெள்ளிவீதியார் என்ற புலவர், ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, பெண்ணின் உடல் மற்றும் உணர்வுகளை இவ்வளவு நுட்பமாகவும், நேர்மையாகவும் வெளிப்படுத்தியிருப்பது சங்க இலக்கியத்தின் சிறப்புக்கு ஒரு சான்று.

வலையொளி இணைப்பு

📝 Footnotes
  1. கிழத்தி (Kilathi) என்பது தமிழில் உரிமையுடையவள், தலைவி, அல்லது இல்லக்கிழத்தி (இல்லத்தின் தலைவி) எனப் பொருள்படும்; சங்க இலக்கியங்களில், இது தலைவனுடன் தொடர்புடைய, உரிமை கொண்டவள் (Lady-love, mistress) என்ற பொருளிலும் பயன்படுத்தப்படுகிறது. இலக்கியத்தில்: சங்க இலக்கியங்களில் தலைவி தன் தலைவனுடன் ஊடல் கொள்ளும் போது பயன்படுத்தும் சொல்லாக இது வருகிறது (எ.கா., கிழத்தி கூற்றுப் பத்து). தொல்காப்பியத்தில்: "காமக்கிழத்தியர்" என்ற தொடரில், தலைவனால் உரிமை கொண்டாடப்பட்ட பெண்கள் (concubines) என்ற பொருளிலும் வருகிறது.

  2. தொடர்ச்சி கன்றும் உண்ணாது கலத்தினும் படாது

  3. விக்கிப்பீடியா - அளபெடை

  4. Nandini Karky's Kurunthogai 27 – Split milk and spoilt beauty

  5. ஜெய மோகனின் திதலையும் பசலையும்

  6. மாதவி பந்தலின் "அல்குல்" என்றால் என்ன?

🔍 Explore Further
  1. Facebook என் நாடுபடு தேறல் நீ - 1 (தலைவன், தலைவி கூடல் குறிப்புகள்)
  2. யாழ் பசலை நோய் - கன்றும் உண்ணாது கலத்தினும் படாது

Disclaimer

The views expressed are personal and for informational purposes only.

Support This Content

If you found this content helpful, consider supporting the author.