கந்த ஷஷ்டி கவசம் - வரிக்கு வரி விளக்கம்
January 1, 2026
A complete explanation of Kanda Sashti Kavasam composed by Devaraya Swamigal. A detailed article on the word-by-word meaning of every line and its benefits.

கந்த ஷஷ்டி கவசம் - வரிவரி விளக்கம்
🕉️ ஓம் முருகா! கந்த ஷஷ்டி கவசம்
கந்த ஷஷ்டி கவசம் என்பது தேவராய சுவாமிகள் அருளிய முருகபக்தி நூலாகும். இது 244 வரிகளைக் கொண்டது. கவசம் என்பது கவசம் போல் காக்கும் பாடலாகும்.
துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும்
நிஷ்டையும் கைகூடும், நிமலரருள் கந்தர்
சஷ்டி கவசம் தனை.
சொல்லுக்குச் சொல் விளக்கம்:
| சொல் | விளக்கம் |
|---|---|
| நிமலர் | குற்றமற்றவராகிய சிவபெருமான் |
| அருள் | பெற்று அருளிய |
| கந்தர் | முருகக் கடவுளின் |
| சஷ்டி | சஷ்டி திருநாளில் ஓதுவதற்குத் தகுந்த |
| கவசம் தனை | கவச மந்திரத்தை |
| துதிப்போர்க்கு | பக்தியோடு தோத்திரம் செய்பவர்களுக்கு |
| வல்வினை | வலிமை வாய்ந்த பழைய தீவினைகள் எல்லாம் |
| போம் | நீங்கிவிடும் |
| துன்பம் | துயரங்கள் எல்லாம் |
| போம் | நீங்கி விடும் |
| நெஞ்சில் | உள்ளத்தில் |
| பதிப்போர்க்கு | ‘கந்த சஷ்டி கவசம்’ என்னும் மந்திரத்தை ஊன்றிப் பதித்து வைப்பவர்களுக்கு |
| செல்வம் | வேண்டிய பொருள் செல்வங்கள் |
| பலித்து | கிடைக்கப்பெற்று |
| கதித்து ஓங்கும் | அச்செல்வங்கள் அதிகரித்து வளரும் |
| நிஷ்டையும் | தவ நிலையும் |
| கைகூடும் | வாய்க்கும் |
🔸 நிமலர் அருள் என்பது நிமலர் அருளிய என்ற பொருளில் வருகிறது. அதாவது: சிவபெருமான் தம் மகனான முருகப்பெருமானை உலகிற்கு அருளினார்; அந்த முருகப்பெருமானின் சஷ்டி கவசத்தை...
முழுப் பொருள்:
குற்றமற்ற சிவபெருமான் உலகிற்கு அருளிய முருகப்பெருமானின் சஷ்டி திருநாளில் ஓதுவதற்குரிய இந்தக் கவச மந்திரத்தை பக்தியுடன் துதிப்பவர்களுக்கு அதாவது தினமும் பாராயணம் செய்பவர்களுக்கு, வலிமை வாய்ந்த பழைய கர்ம வினைகள் அனைத்தும் நீங்கி, எல்லா வகையான துயரங்களும் அகன்றுவிடும். இதை உள்ளத்தில் ஊன்றிப் பதித்து வைப்பவர்களுக்கு வேண்டிய அனைத்துப் பொருள் செல்வங்களும் கிடைத்து, அவை ஒளிர்ந்து மேன்மேலும் வளரும்; மேலும் ஆன்மீக தவ நிலையும், ஒருமுக சிந்தனையும், மன உறுதியும் வாய்க்கும். இவ்வாறு இந்தக் கவசம் உலக நலனையும் ஆன்மீக முன்னேற்றத்தையும் ஒருங்கே அளிக்கிறது.
அமரரிடர் தீர அமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி.
சொல்லுக்குச் சொல் விளக்கம்:
| சொல் | விளக்கம் |
|---|---|
| நெஞ்சே | எனது மனமே! |
| அமரர் | இந்திரன் முதலான தேவர்கள் |
| இடர் | பட்ட தொல்லைகள் |
| தீர | நீங்கும்படியாக |
| அமரம் புரிந்த | சூர பதுமன் முதலான அசுரர்களுடன் போர் செய்து அவர்களைச் சம்ஹாரம் செய்த |
| குமரன் | முருகக்கடவுளுடைய |
| அடி | திருவடிகளை |
| குறி | (நீ தொடங்கிய காரியம் தடங்கலின்றி முடியும் பொருட்டு) தியானித்து வணங்குவாயாக |
முழுப் பொருள்:
எனது மனமே! இந்திரன் முதலான தேவர்கள் பட்ட தொல்லைகள் நீங்கும்படியாக, சூர பதுமன் முதலான அசுரர்களுடன் போர் செய்து அவர்களை அழித்த முருகக்கடவுளுடைய திருவடிகளை, நீ தொடங்கிய காரியம் தடங்கலின்றி முடியும் பொருட்டு தியானித்து வணங்குவாயாக.
இனிவருபவை நிலைமண்டில ஆசிரியப்பா
சஷ்டியை நோக்கச் சரவண பவனார்
சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன்
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாடக் கிண்கிணி யாட
மையல் நடனஞ்செய்யும் மயில்வா கனனார்
கையில்வே லால்எனைக் காக்கவென் றுவந்து
சொல்லுக்குச் சொல் விளக்கம்:
| சொல் | விளக்கம் |
|---|---|
| சரவணபவன் | சரவணப் பொய்கையில் தோன்றியவனும் |
| ஆர் | அன்பு நிறைந்த |
| சிஷ்டருக்கு | பக்தர்களுக்கு |
| உதவும் | கருணை காட்டி அருள் புரியும் |
| செம் கதிர் | சிவந்த ஒளிக்கதிர்களை உடைய |
| வேலோன் | வேலாயுதத்தை ஏந்தியவனும் |
| பாதம் இரண்டில் | தன்னுடைய திருப்பாதங்கள் இரண்டிலும் |
| பல் மணி | பல மணிகளால் ஆன |
| சதங்கை | சதங்கை என்னும் அணிகலனானது |
| கீதம் பாட | ராகத்தைப் பாட |
| கிண்கிணி | கிண்கிணி என்னும் அணியானது |
| ஆட | அசைந்து ஆட |
| மையல் | எல்லார் மனத்தையும் கவர்ந்து ஈர்க்கக்கூடிய |
| நடம் செய்யும் | திருநடனம் புரியும் |
| மயில்வாகனன் | மயிலை வாகனமாகக் கொண்ட குமரக் கடவுள் |
| வந்து | என் கண்முன்னே எழுந்தருளி வந்து காட்சி தந்து |
| கையில் | தன் திருக்கையில் |
| ஆர் | ஏந்துகின்ற |
| வேலால் | வேலாயுதத்தால் |
| என்னை | அடியேனாகிய என்னை |
| காக்க என்று | (துன்பங்கள் அனைத்தையும் நீக்கி) காப்பாற்றுவான் என்று கருதி |
| சஷ்டியை | கந்த சஷ்டி கவசம் என்னும் திருமந்திரத்தை |
| நோக்க | மனத்தால் தியானிக்கின்றேன் |
🔸 சிஷ்டர் என்றால் அடியவர். சிரேஷ்டர் என்ற வடசொல்லுக்குச் சிறந்தவர், அடியவர் என்று பொருள். அது சிஷ்டர் என்று சிதைந்து பேச்சுவழக்கில் புழங்கும். அடியவர்கள், சிறந்தவர்கள், ஆசிரியர்கள் இவர்களின் வாழ்வுமுறையை, ஆசாரத்தைச் சிஷ்டாசாரம் என்று குறிப்பதும் வழக்கத்தில் இருக்கிறது..
முழுப் பொருள்:
கந்த சஷ்டி கவசம் என்னும் திருமந்திரத்தை மனத்தால் தியானிக்கின்றேன். சரவணப் பொய்கையில் தோன்றியவனும், அன்பு நிறைந்த பக்தர்களுக்குக் கருணை காட்டி அருள் புரியும், சிவந்த ஒளிக்கதிர்களை உடைய வேலாயுதத்தை ஏந்தியவனும், தன்னுடைய திருப்பாதங்கள் இரண்டிலும் பல மணிகளால் ஆன சதங்கை என்னும் அணிகலனானது ராகத்தைப் பாட, கிண்கிணி என்னும் அணியானது அசைந்து ஆட, எல்லார் மனத்தையும் கவர்ந்து ஈர்க்கக்கூடிய திருநடனம் புரியும், மயிலை வாகனமாகக் கொண்ட குமரக் கடவுள் என் கண்முன்னே எழுந்தருளி வந்து காட்சி தந்து, தன் திருக்கையில் ஏந்துகின்ற வேலாயுதத்தால் அடியேனாகிய என்னைத் துன்பங்கள் அனைத்தையும் நீக்கிக் காப்பாற்றுவான் என்று கருதி தியானிக்கின்றேன்.
வரவர வேலா யுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக
சொல்லுக்குச் சொல் விளக்கம்:
| சொல் | விளக்கம் |
|---|---|
| வேலாயுதனார் | வேல் ஆயுதத்தை உடைய குமரக்கடவுள் |
| வர வர | (என்னைக் காத்து அருள் செய்யும் பொருட்டு) வந்தருள்வாராக! வந்தருள்வாராக!! |
| மயிலோன் | மயிலை வாகனமாகக் கொண்ட முருகக் கடவுள் |
| வருக வருக வருக வருக | வந்து அருளுக! வந்து அருளுக! வந்து அருளுக! வந்து அருளுக! |
முழுப் பொருள்:
வேல் ஆயுதத்தை உடைய குமரக்கடவுள் என்னைக் காத்து அருள் செய்யும் பொருட்டு வந்தருள்வாராக! வந்தருள்வாராக!! மயிலை வாகனமாகக் கொண்ட முருகக் கடவுள் வந்து அருளுக! வந்து அருளுக! வந்து அருளுக! வந்து அருளுக!
இந்திரன் முதலா எண்டிசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக!
சொல்லுக்குச் சொல் விளக்கம்:
🔸 மந்திரங்களில் முதன்மையானது ஓங்கார மந்திரம். ஓங்காரமே வேல்வடிவாய் அமைந்ததால் மந்திரமே வடிவான வேல் என்று பொருள் கொள்ளலாம் அல்லது அழகே வடிவான வேல் என்றும் பொருள் கொள்ளலாம்
| சொல் | விளக்கம் |
|---|---|
| இந்திரன் முதலா | தேவேந்திரன் அதிபதியாக இருக்கும் கிழக்கு திசை உட்பட |
| எண் திசை | எட்டுத் திசைகளில் உள்ளவர்கள் எல்லாம் |
| போற்ற | வணங்கும் பெருமையும் |
| மந்திரம் | மந்திர வலிமையும் உடைய |
| வடி | கூர்மையான |
| வேல் | வேலாயுதமானது |
| வருக வருக | (என்னைக் காத்து அருளும் பொருட்டு) வந்து அருளுக! வந்து அருளுக! |
முழுப் பொருள்:
தேவேந்திரன் அதிபதியாக இருக்கும் கிழக்கு திசை உட்பட எட்டுத் திசைகளில் உள்ளவர்கள் எல்லாம் வணங்கும் பெருமையும் மந்திர வலிமையும் உடைய கூர்மையான வேலாயுதமானது என்னைக் காத்து அருளும் பொருட்டு வந்து அருளுக! வந்து அருளுக!
வாசவன் மருகா! வருக வருக
நேசக் குறமகள் நினைவோன் வருக
சொல்லுக்குச் சொல் விளக்கம்:
🔸 ஞான சக்தி வடிவான முருகப்பெருமானின் இருபுறமும் வீற்றிருக்கும் இச்சா சக்தி, கிரியா சக்திகளான திருத்தேவியர் இருவரையும் இந்த வரிகளில் நினைத்து அவர்களையும் முருகனுடன் சேர்ந்து வரவேற்கிறார் அடிகளார்.
உலகச் செல்வங்கள் அனைத்திற்கும் தலைவர்களாக எட்டு வசுக்கள் என்னும் தேவர்களைச் சொல்லுவார்கள். அந்த எட்டு வசுக்களின் தலைவன் இந்திரன். அதனால் அவனுக்கு வாசவன் என்று ஒரு பெயர் உண்டு. அவன் மகளாகிய தெய்வயானைப் பிராட்டியாரை மணம் புரிந்தவன் என்பதால் முருகனை ‘வாசவன் மருகா’ என்று விளித்து வரவேற்கிறார்.
குறவர் குலமகளாகிய வள்ளிப் பிராட்டியாரின் நெஞ்சம் நிறை நேசத்தை என்றும் மறவாமல் நினைத்துக் கொண்டே இருப்பதால் 'நேசக் குறமகள் நினைவோன்' என்றார்.
| சொல் | விளக்கம் |
|---|---|
| வாசவன் | தேவேந்திரனின் |
| மருகா | மருமகனே! |
| வருக வருக | (என்னைக் காக்க) என்னிடம் வந்து அருள்க! வந்து அருள்க! |
| நேச | அன்பு மிகுந்த |
| குறமகள் | குறவர்களிடையே வளர்ந்த வள்ளியம்மையாரின் |
| நினைவோன் | எண்ணத்தில் என்றும் நிலைத்திருக்கும் பெருமை உடைய கந்தக்கடவுள் |
| வருக | வந்து அருள்க! |
முழுப் பொருள்:
தேவேந்திரனின் மருமகனே! என்னைக் காக்க என்னிடம் வந்து அருள்க! வந்து அருள்க! அன்பு மிகுந்த குறவர்களிடையே வளர்ந்த வள்ளியம்மையாரின் எண்ணத்தில் என்றும் நிலைத்திருக்கும் பெருமை உடைய கந்தக்கடவுள் வந்து அருள்க!
ஆறுமுகம் படைத்த ஐயா! வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக
சொல்லுக்குச் சொல் விளக்கம்:
| சொல் | விளக்கம் |
|---|---|
| ஆறுமுகம் படைத்த | ஆறு திருமுகங்களைக் கொண்ட திருவடிவை உடைய |
| ஐயா | தலைவனே! |
| வருக | வந்து அருள்க! |
| நீறு | திருநீற்றை |
| இடும் | திருமேனியில் அணிகின்ற |
| வேலவன் | வேலாயுதபாணியே! |
| நித்தம் | நாள் தோறும் |
| வருக | வந்தருளுக! |
முழுப் பொருள்:
ஆறு திருமுகங்களைக் கொண்ட திருவடிவை உடைய தலைவனே! வந்து அருள்க! திருநீற்றை திருமேனியில் அணிகின்ற வேலாயுதபாணியே! நாள் தோறும் வந்தருளுக!
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக!
சரஹண பவனார் சடுதியில் வருக
சொல்லுக்குச் சொல் விளக்கம்:
| சொல் | விளக்கம் |
|---|---|
| சிரகிரி வேலவன் | சிரகிரியில் (சென்னிமலையில்) எழுந்தருளியுள்ள வேலவனே! |
| சீக்கிரம் | (தீய சக்திகள் என்னை அழிப்பதற்குச் சூழ்ந்துகொள்ளுமுன்) விரைவாக |
| வருக | (என்னைக் காப்பதற்கு) வந்து அருள்க! |
| சரஹண பவனார் | சரவணப் பொய்கையில் உதித்த ஆறுமுகக் கடவுளே |
| சடுதியில் | சீக்கிரமாக |
| வருக | வந்து அருள்க! |
🔸 சிரம் என்றால் தலை; சென்னி என்றாலும் தலை. சென்னிமலையில் மேல் அமர்ந்திருக்கும் வேலவன் சீக்கிரம் வருக. சரவணப்பொய்கையில் உதித்த சரவணபவன் விரைவில் வருக.
முழுப் பொருள்:
சிரகிரியில் (சென்னிமலையில்) எழுந்தருளியுள்ள வேலவனே! தீய சக்திகள் என்னை அழிப்பதற்குச் சூழ்ந்துகொள்ளுமுன் விரைவாக என்னைக் காப்பதற்கு வந்து அருள்க! சரவணப் பொய்கையில் உதித்த ஆறுமுகக் கடவுளே சீக்கிரமாக வந்து அருள்க!
ரஹண பவச ரரரர ரரர
ரிஹண பவச ரிரிரிரி ரிரிரி
விணபவ சரஹ வீரா! நமோநம!
நிபவ சரஹண நிறநிற நிறென
வசர ஹணப! வருக! வருக!
அசுரர் குடிகெடுத்த ஐயா! வருக!
சொல்லுக்குச் சொல் விளக்கம்:
🔸 சரஹணபவ என்பது ஷடாக்ஷரம் என்னும் ஆறெழுத்து மந்திரம். அதன் எழுத்துகளை சிறிதே முன்னும் பின்னுமாக மாற்றி உருவேற்றினால் வெவ்வேறு பயன்கள் கிடைக்கும் என்பார்கள் மந்திர நூலோர். அப்படி வெவ்வேறு உருவில் அமையும் ஆறெழுத்து மந்திரங்களையே மந்திர நூலாகிய இந்த நூலின் அடிகளில் அமைத்திருக்கிறார் அடிகளார்.
| சொல் | விளக்கம் |
|---|---|
| வீரா | வீரம் மிகுந்தவனே! |
| நமோநம | உனக்கு நமஸ்காரம்! நமஸ்காரம்! |
| நிறநிறநிற என | (பகைவர்கள் அஞ்சும் படி) 'நிற நிற நிற' என ஓசை உண்டாகுமாறு |
| வருக வருக | வந்து அருள்க! வந்து அருள்க! |
| அசுரர் | தேவர்களுக்குத் தொல்லை கொடுத்த சூர பதுமன் முதலான அசுரர்களின் |
| குடி | குலத்தை |
| கெடுத்த | அழித்த |
| ஐயா | ஐயனே! |
| வருக | வந்து அருள்வாயாக! |
முழுப் பொருள்:
வீரம் மிகுந்தவனே! உனக்கு நமஸ்காரம்! நமஸ்காரம்! பகைவர்கள் அஞ்சும் படி 'நிற நிற நிற' என ஓசை உண்டாகுமாறு வந்து அருள்க! வந்து அருள்க! தேவர்களுக்குத் தொல்லை கொடுத்த சூர பதுமன் முதலான அசுரர்களின் குலத்தை அழித்த ஐயனே! வந்து அருள்வாயாக!
என்னை ஆளும் இளையோன் கையில்
பன்னிரண் டாயுதம் பாசாங் குசமும்
பரந்த விழிகள் பன்னிரண் டிலங்க
விரைந்தெனைக் காக்க வேலோன் வருக!
சொல்லுக்குச் சொல் விளக்கம்:
🔸 வேலாயுதம், சூலாயுதம், சங்கு, சக்கராயுதம், வில், அம்பு, வாள், மழு, குடை, தண்டாயுதம் (கம்பு), சந்திராயுதம், வல்லாயுதம் என்னும் பன்னிரு ஆயுதங்களையும் முருகன் தனது திருக்கரங்களில் ஏந்தியிருப்பதாகச் சொல்கிறார்
| சொல் | விளக்கம் |
|---|---|
| என்னை ஆளும் | என்னை ஆட்கொண்டு அருளும் |
| இளையோன் | சிவபெருமானின் இளைய குமாரரும் |
| வேலோன் | வேலாயுதத்தை ஏந்தியவருமாகிய முருகக் கடவுள் |
| கையில் | தம்முடைய பன்னிரண்டு கைகளிலும் |
| பன்னிரண்டு ஆயுதம் | பன்னிரண்டு ஆயுதங்களும் |
| பாச அங்குசமும் | பாசமும் அங்குசமும் |
| பரந்த | பரந்து விரிந்த திருப்பார்வையை உடைய |
| பன்னிரண்டு விழிகள் | பன்னிரண்டு திருக்கண்களும் |
| இலங்க | விளங்க |
| என்னைக் காக்க | என்னை ரட்சிக்கும் பொருட்டு |
| விரைந்து | (தீய சக்திகள் என்னை அணுகுமுன்) வேகமாக |
| வருக | வந்தருள்க! |
முழுப் பொருள்:
என்னை ஆட்கொண்டு அருளும், சிவபெருமானின் இளைய குமாரரும் வேலாயுதத்தை ஏந்தியவருமாகிய முருகக் கடவுள், தம்முடைய பன்னிரண்டு கைகளிலும் பன்னிரண்டு ஆயுதங்களும் பாசமும் அங்குசமும், பரந்து விரிந்த திருப்பார்வையை உடைய பன்னிரண்டு திருக்கண்களும் விளங்க, என்னை ரட்சிக்கும் பொருட்டு, தீய சக்திகள் என்னை அணுகுமுன் வேகமாக வந்தருள்க!
ஐயும் கிலியும் அடைவுடன் செளவும்
உய்யொளி சௌவும் உயிரையும் கிலியும்
கிலியுஞ் சௌவும் கிளரொளி யையும்
நிலைபெற் றென்முன் நித்தமும் ஒளிரும்
சண்முகன் றீயும் தனியொளி யொவ்வும்
குண்டலி யாம்சிவ குகன்தினம் வருக!
சொல்லுக்குச் சொல் விளக்கம்:
🔸 ஐயும் (ஐம்), கிலியும் (க்லீம்), சௌவும் (ஸெளம்) ஆகியவை “பீஜாக்ஷரங்கள்” என்று வடமொழியில் கூறப்படும். இதனை “பீஜம்+அட்சரம்” என பிரிப்பர். “பீஜம்” என்றால் “உயிர்ப்புள்ள விதை (ஒலி)”, அட்சரம் என்றால் “எழுத்து (தாளம்)”, உயிர்ப்புள்ள ஒலிகள் ஒன்று சேர்ந்தால் அது “மந்திரம்’ ஆகிறது. அந்த மந்திர விதைகள் நம் மனதில் தூவப்பட்டால் அது எமது முத்திக்கு வழிவகுக்கும்.
| சொல் | விளக்கம் |
|---|---|
| ஐயும் கிலியும் | "ஐம்", "க்லீம்" என்னும் பீஜாக்ஷர மந்திரங்களும் |
| அடைவுடன் | சரியான வரிசையிலும் முறையிலும் |
| செளவும் | "சௌம்" என்னும் பீஜாக்ஷரத்துடன் சேர்த்து உச்சரிக்கும் மந்திர ஒலியானது |
| உய் | ஆன்மாவை விடுதலை அடையச் செய்யும் (நாம் இவ்வுலகில் / வினைகளிலிருந்து தப்பிப் பிழைப்பதற்கு அருள்செய்யும்) |
| ஒளி | உள்ளொளியாக பிரகாசிக்கும் |
| சௌவும் | "சௌம்" மந்திர ஒலியும் |
| உயிர் | குண்டலினி சக்தியாகிய உயிர் காற்றை |
| ஐயும் கிலியும் | தூண்டி |
| கிலியும் சௌவும் | எழுத்துக்களை இடம் மாற்றி "க்லீம்", "சௌம்" என உச்சரிக்கும் மந்திரம் |
| கிளர் | குண்டலினி சக்தியைக் கிளர்ந்தெழச் செய்து |
| ஒளி | உள்ளொளியை |
| ஐயும் | வளர்த்தெடுக்கும் |
| நிலைபெற்று | நிலையாக நிலைத்து நிற்க |
| என்முன் | எனது அகத்தே புருவ மத்தியில் (ஆக்ஞா சக்கரத்தில்) |
| நித்தமும் | எப்போதும் |
| ஒளிரும் | பிரகாசித்து ஒளிர்ந்து கொண்டிருக்கும் |
| சண்முகன் | ஆறுமுக வடிவில் விளங்கும் முருகப்பெருமானும் |
| றீயும் | "ஹ்ரீம்" என்னும் பீஜாக்ஷரமும் |
| தனி ஒளி | தனித்த அகத்தீயாகவும் உள்ளொளியாகவும் |
| ஒவ்வும் | "ஓம்" என்னும் பிரணவ மந்திரமும் |
| குண்டலி | மூலாதார சக்கரத்தில் அமைந்திருக்கும் குண்டலினி சக்தியாகவும் |
| ஆம் | ஆகிய |
| சிவகுகன் | சிவமைந்தனாகிய குகப்பெருமான் |
| தினம் | நாள் தோறும் |
| வருக | எனக்குள் ஒளிர்ந்து அருள்வாயாக! |
முழுப் பொருள்:
"ஐம்", "க்லீம்" என்ற ஒலிகளை "சௌம்" எனும் ஒலியுடன் சேர்த்து உச்சரிக்கும் மந்திர ஒலியானது, ஆன்மாவை அதாவது குண்டலினி சக்தியை தூண்டி உள்ளே உள்ளொளியாக பிரகாசிக்கச் செய்யும். எழுத்துக்களை இடம் மாற்றி "க்லீம்", "சௌம்" என்ற வகையில் உச்சரிக்கும் மந்திரம், குண்டலினி சக்தியைக் கிளர்ந்து எழ வைத்து உள்ளொளியை கூட்டும். இவ்வாறு தோன்றும் உள்ளொளியானது எப்போதும் நிலையாக எனது அகத்தே – புருவ மத்தியில் நிலையாக எப்போதும் ஒளிர்ந்து கொண்டிருக்கும். தீயாக, அகத் தீயாக தனி ஒளியாய் உள்ளொளியாக எரிந்து, ஒளிர்ந்து, பிரகாசித்துக் கொண்டிருக்கும் எமது மூலாதாரத்தில் அமைந்திருக்கும் குண்டலினி சக்தியாக வீற்றிருக்கும் குகனே முருகனே தினமும் எனக்குள் ஒளிர்வாயாக!
ஆறு முகமும் அணிமுடி ஆறும்
நீறிடு நெற்றியில் நீண்ட புருவமும்
பன்னிரு கண்ணும் பவளச்செவ் வாயும்
நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்
சொல்லுக்குச் சொல் விளக்கம்:
| சொல் | விளக்கம் |
|---|---|
| ஆறுமுகமும் | ஆறு திருமுகங்களும் |
| அணி | அழகிய |
| முடி ஆறும் | மகுடங்கள் ஆறும் |
| நீறு இடும் | திருநீறு அணிந்த |
| நெற்றியும் | ஆறு திருநெற்றிகளும் |
| நீண்ட | நீண்டு நெளிந்திருக்கும் |
| புருவமும் | பன்னிரண்டு புருவங்களும் |
| பன்னிரு கண்ணும் | பன்னிரண்டு திருக்கண்களும் |
| பவளச் செவ்வாயும் | பவளம்போல் சிவந்த ஆறு திருவாய்களும் |
| நல் நெறி | சீரான |
| நெற்றியில் | ஆறு திருநெற்றிகளிலும் |
| நவமணிச் சுட்டியும் | ஒன்பது வகை இரத்தினங்கள் பதித்த சுட்டி என்னும் ஆபரணமும் |
முழுப் பொருள்:
ஆறு திருமுகங்களும், அழகிய மகுடங்கள் ஆறும், திருநீறு அணிந்த ஆறு திருநெற்றிகளும், நீண்டு நெளிந்திருக்கும் பன்னிரண்டு புருவங்களும், பன்னிரண்டு திருக்கண்களும், பவளம்போல் சிவந்த ஆறு திருவாய்களும், சீரான ஆறு திருநெற்றிகளிலும் ஒன்பது வகை இரத்தினங்கள் பதித்த சுட்டி என்னும் ஆபரணமும்.
ஈராறு செவியில் இலகுகுண் டலமும்
ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்
பல்பூ ஷணமும் பதக்கமும் தரித்து
நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்
சொல்லுக்குச் சொல் விளக்கம்:
| சொல் | விளக்கம் |
|---|---|
| ஈர் ஆறு செவியில் | பன்னிரண்டு திருச்செவிகளிலும் |
| இலகு | விளங்குகின்ற |
| குண்டலமும் | குண்டலம் என்னும் காதணியும் |
| திண் | வலிமை வாய்ந்த |
| ஆறு இரு புயத்து | பன்னிரண்டு தோள்களிலும் |
| அழகிய மார்பில் | அழகுபொருந்திய திருமார்பில் |
| பல் பூஷணமும் | பலவகையான ஆபரணங்களும் |
| பதக்கமும் | மார்புப் பதக்கமும் |
| தரித்து | அணிந்து |
| நல் மணி பூண்ட | நல்ல மணிகளைக் கொண்ட |
| நவரத்ன மாலையும் | நவ ரத்தின மாலையும் |
முழுப் பொருள்:
பன்னிரண்டு திருச்செவிகளிலும் விளங்குகின்ற குண்டலம் என்னும் காதணியும், வலிமை வாய்ந்த பன்னிரண்டு தோள்களிலும், அழகுபொருந்திய திருமார்பில் பலவகையான ஆபரணங்களும், மார்புப் பதக்கமும் அணிந்து, நல்ல மணிகளைக் கொண்ட நவ ரத்தின மாலையும்.
முப்புரி நூலும் முத்தணி மார்பும்
செப்பழ குடைய திருவயி றுந்தியும்
துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்
நவரத்னம் பதித்த நற்சீ ராவும்
இருதொடை யழகும் இணைமுழந் தாளும்
திருவடி யதனில் சிலம்பொலி முழங்க
சொல்லுக்குச் சொல் விளக்கம்:
| சொல் | விளக்கம் |
|---|---|
| முப்புரி நூலும் | மூன்று புரிகளைக் கொண்ட பூணூலையும் |
| முத்து அணி | முத்து மாலையையும் அணிந்த |
| மார்பும் | திருமார்பும் |
| செப்பு | புகழத்தக்க |
| அழகுடைய | வனப்புடைய |
| திரு | மேன்மையான |
| வயிறு | வயிறும் |
| உந்தியும் | கொப்பூழும் |
| துவண்ட | அசைந்த |
| மருங்கில் | இடுப்பிலே |
| சுடர் | சுடர்விட்டு |
| ஒளி | ஒளிபரப்புகின்ற |
| பட்டும் | பட்டாடையும் |
| நவரத்னம் பதித்த | நவ ரத்தினங்கள் பதித்த |
| நல் சீராவும் | நல்ல போர்க்கவசமும் |
| இரு தொடை அழகும் | இரண்டு தொடைகளின் அழகும் |
| இணை | இரண்டு |
| முழந்தாளும் | முழங்கால்களும் |
| திருவடியதனில் | அழகிய திருவடிகளில் |
| சிலம்பு | கிண்கிணியும் |
| ஒலி முழங்க | ஓசை எழுப்ப |
முழுப் பொருள்:
மூன்று புரிகளைக் கொண்ட பூணூலையும், முத்து மாலையையும் அணிந்த திருமார்பும், புகழத்தக்க வனப்புடைய மேன்மையான வயிறும் கொப்பூழும், அசைந்த இடுப்பிலே சுடர்விட்டு ஒளிபரப்புகின்ற பட்டாடையும், நவ ரத்தினங்கள் பதித்த நல்ல போர்க்கவசமும், இரண்டு தொடைகளின் அழகும், இரண்டு முழங்கால்களும், அழகிய திருவடிகளில் கிண்கிணியும் ஓசை எழுப்ப.
செககண செககண செககண செகண
மொகமொக மொகமொக மொகமொக மொகென
நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண
ரரரர ரரரர ரரரர ரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு
விந்து விந்து மயிலோன் விந்து
முந்து! முந்து! முருகவேள் முந்து!
சொல்லுக்குச் சொல் விளக்கம்:
🔸 செககண என்பதில் தொடங்கி டிங்குகு என்பதுவரை சிலம்பொலி இப்படி எல்லாம் ஒலியெழுப்ப என அமைந்துள்ளன.
| சொல் | விளக்கம் |
|---|---|
| விந்து விந்து | எல்லாப் பொருள்களுக்கும் முதலான மூலப் பரம்பொருளே! மூலப் பரம்பொருளே! |
| மயிலோன் | மயில் வாகனத்தைக் கொண்டுள்ள |
| விந்து | மூலப் பரம்பொருளே! |
| முருகவேள் | முருகவேளாகிய கடவுளே! |
| முந்து முந்து முந்து | (என்னைத் தீய சக்திகளிலிருந்து காக்கும் பொருட்டு, அச்சக்திகள் என்னை அழிக்க வருவதற்கு முன்) நீ முன்னதாகப் புறப்பட்டு வருவாயாக! |
முழுப் பொருள்:
எல்லாப் பொருள்களுக்கும் முதலான மூலப் பரம்பொருளே! மூலப் பரம்பொருளே! மயில் வாகனத்தைக் கொண்டுள்ள மூலப் பரம்பொருளே! முருகவேளாகிய கடவுளே! என்னைத் தீய சக்திகளிலிருந்து காக்கும் பொருட்டு, அச்சக்திகள் என்னை அழிக்க வருவதற்கு முன் நீ முன்னதாகப் புறப்பட்டு வருவாயாக!
என்றனை யாளும் ஏரகச் செல்வ!
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந் துதவும்
சொல்லுக்குச் சொல் விளக்கம்:
| சொல் | விளக்கம் |
|---|---|
| என் தனை ஆளும் | உனது அடியவனாகிய என்னை ஆண்டு அருளும் |
| ஏரகச் செல்வ | திருவேரகம் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் செல்வனே! |
| மைந்தன் | உன் மகனாகிய அடியேன் |
| வேண்டும் | விரும்பிக் கேட்கின்ற |
| வரம் | வரங்களை |
| மகிழ்ந்து | சந்தோஷங்கொண்டு |
| உதவும் | கொடுக்கின்ற |
முழுப் பொருள்:
உனது அடியவனாகிய என்னை ஆண்டு அருளும், திருவேரகம் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் செல்வனே! உன் மகனாகிய அடியேன் விரும்பிக் கேட்கின்ற வரங்களை சந்தோஷங்கொண்டு கொடுக்கின்ற.
லாலா லாலா லாலா வேசமும்
லீலா லீலா லீலா வினோதனென்(று)
உன்திரு வடியை உறுதியென் றெண்ணும்
என்தலை வைத்துன் இணையடி காக்க!
சொல்லுக்குச் சொல் விளக்கம்:
| சொல் | விளக்கம் |
|---|---|
| லாலா லாலா லாலா | லாலா லாலா லாலா என்னும் துதி ஒலிகளின் |
| வேசமும் | பக்திப் பரவச ஓசைகள் ஒலிக்க |
| லீலா லீலா லீலா | பல்வகைத் திருவிளையாடல்களும் பொருந்திய |
| விநோதன் | விநோதத்தை உடையவனே! |
| என்று | என்று கூறித் துதித்து |
| உன் திருவடியை | உன்னுடைய அழகிய பாதங்கள் |
| உறுதி என்று | என்னை நிச்சயம் காக்கும் என்று நம்பிக்கையுடன் |
| எண்ணும் | நினைக்கின்ற |
| என் தலை | பக்தனாகிய என்னுடைய தலைமேல் |
| உன் இணை அடி | உன்னுடைய இரண்டு திருவடிகளையும் |
| வைத்து | வைத்து அருளி |
| காக்க | என்னைக் காத்து அருள் செய்வாயாக! |
முழுப் பொருள்:
லாலா லாலா லாலா என்னும் துதி ஒலிகளின் பக்திப் பரவச ஓசைகள் ஒலிக்க, பல்வகைத் திருவிளையாடல்களும் பொருந்திய விநோதத்தை உடையவனே! என்று கூறித் துதித்து, உன்னுடைய அழகிய பாதங்கள் என்னை நிச்சயம் காக்கும் என்று நம்பிக்கையுடன் நினைக்கின்ற பக்தனாகிய என்னுடைய தலைமேல் உன்னுடைய இரண்டு திருவடிகளையும் வைத்து அருளி என்னைக் காத்து அருள் செய்வாயாக!
என்னுயிர்க் குயிராம் இறைவன்! காக்க!
பன்னிரு விழியால் பாலனைக் காக்க!
சொல்லுக்குச் சொல் விளக்கம்:
| சொல் | விளக்கம் |
|---|---|
| என் உயிர்க்கு உயிராம் | என்னுடைய உயிருக்கு உயிராக இருக்கின்ற |
| இறைவன் | முருகக்கடவுளே! |
| காக்க | என்னைக் காத்து அருள் செய்க! |
| பன்னிரு விழியால் | பன்னிரண்டு திருக்கண்களாலும் |
| பாலனை | உமது குழந்தையாகிய என்னை |
| காக்க | காத்து அருள் செய்ய வேண்டுகிறேன் |
முழுப் பொருள்:
என்னுடைய உயிருக்கு உயிராக இருக்கின்ற முருகக்கடவுளே! என்னைக் காத்து அருள் செய்க! பன்னிரண்டு திருக்கண்களாலும் உமது குழந்தையாகிய என்னை காத்து அருள் செய்ய வேண்டுகிறேன்.
அடியேன் வதனம் அழகுவேல் காக்க!
பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க!
சொல்லுக்குச் சொல் விளக்கம்:
| சொல் | விளக்கம் |
|---|---|
| அடியேன் | அடியவனாகிய என்னுடைய |
| வதனம் | முகத்தை |
| அழகு வேல் | உனது அழகிய வேலானது |
| காக்க | காத்தருள வேண்டும் |
| பொடி புனை நெற்றியை | திருநீற்றை அணிகின்ற நெற்றியை |
| புனித | பரிசுத்தமான |
| வேல் காக்க | அந்த வேலாயுதமே காத்தருள வேண்டும் |
முழுப் பொருள்:
அடியவனாகிய என்னுடைய முகத்தை உனது அழகிய வேலானது காத்தருள வேண்டும். திருநீற்றை அணிகின்ற நெற்றியை பரிசுத்தமான அந்த வேலாயுதமே காத்தருள வேண்டும்.
கதிர்வேல் இரண்டு கண்ணினைக் காக்க!
விதிசெவி இரண்டும் வேலவர்! காக்க!
சொல்லுக்குச் சொல் விளக்கம்:
| சொல் | விளக்கம் |
|---|---|
| கதிர் வேல் | ஒளி வீசுகின்ற வேலாயுதமானது |
| இரண்டு கண்ணினை | எனது இரு கண்களை |
| காக்க | காத்தருள வேண்டும் |
| விதி | பிரமனால் படைக்கப்பட்ட |
| செவி இரண்டும் | இரு செவிகளையும் |
| வேலவர் | வேலாயுதபாணியே! |
| காக்க | தாங்கள் காத்தருள வேண்டும்! |
முழுப் பொருள்:
ஒளி வீசுகின்ற வேலாயுதமானது எனது இரு கண்களை காத்தருள வேண்டும். பிரமனால் படைக்கப்பட்ட இரு செவிகளையும் வேலாயுதபாணியே! தாங்கள் காத்தருள வேண்டும்!
நாசிக ளிரண்டும் நல்வேல் காக்க!
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க!
சொல்லுக்குச் சொல் விளக்கம்:
| சொல் | விளக்கம் |
|---|---|
| நாசிகள் இரண்டும் | இரண்டு மூக்குத் துவாரங்களையும் |
| நல்வேல் | நன்மையைச் செய்யும் வேலானது |
| காக்க | காத்தருள வேண்டும் |
| பேசிய | உனது புகழைப் பாடிய |
| வாய்தனை | எனது வாயை |
| பெரு வேல் | பெருமை வாய்ந்த வேலானது |
| காக்க | காத்தருள வேண்டும்! |
முழுப் பொருள்:
இரண்டு மூக்குத் துவாரங்களையும் நன்மையைச் செய்யும் வேலானது காத்தருள வேண்டும். உனது புகழைப் பாடிய எனது வாயை பெருமை வாய்ந்த வேலானது காத்தருள வேண்டும்!
முப்பத் திருபல் முனைவேல் காக்க!
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க!
சொல்லுக்குச் சொல் விளக்கம்:
| சொல் | விளக்கம் |
|---|---|
| முப்பத்திருபல் | என்னுடைய முப்பத்திரண்டு பற்களையும் |
| முனை | கூர்மை பொருந்திய |
| வேல் காக்க | வேலானது காத்தருள வேண்டும் |
| செப்பிய | உனது தோத்திரங்களைச் சொல்லிய |
| நாவை | நாக்கை |
| செவ்வேல் | செம்மை கொண்ட வேலானது |
| காக்க | காத்தருள வேண்டும் |
முழுப் பொருள்:
என்னுடைய முப்பத்திரண்டு பற்களையும் கூர்மை பொருந்திய வேலானது காத்தருள வேண்டும். உனது தோத்திரங்களைச் சொல்லிய நாக்கை செம்மை கொண்ட வேலானது காத்தருள வேண்டும்.
கன்ன மிரண்டும் கதிர்வேல் காக்க!
என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க!
சொல்லுக்குச் சொல் விளக்கம்:
| சொல் | விளக்கம் |
|---|---|
| கன்னம் இரண்டும் | கன்னங்கள் இரண்டையும் |
| கதிர் வேல் | ஒளிவீசும் வேலானது |
| காக்க | காத்தருள வேண்டும் |
| என் இளங்கழுத்தை | எனது இளமையான கழுத்தை |
| இனிய | பக்தர்களுக்கு இனிமையான |
| வேல் காக்க | வேலானது காத்தருள வேண்டும் |
முழுப் பொருள்:
கன்னங்கள் இரண்டையும் ஒளிவீசும் வேலானது காத்தருள வேண்டும். எனது இளமையான கழுத்தை பக்தர்களுக்கு இனிமையான வேலானது காத்தருள வேண்டும்.
மார்பை இரத்ன வடிவேல் காக்க!
சேரிள முலைமார் திருவேல் காக்க!
சொல்லுக்குச் சொல் விளக்கம்:
| சொல் | விளக்கம் |
|---|---|
| மார்பை | மார்பை |
| இரத்ன | இரத்னங்கள் பதித்த |
| வடி | கூர்மையான |
| வேல் காக்க | வேலானது காத்தருள வேண்டும் |
| சேர் | மார்போடு சேர்ந்துள்ள |
| இளமுலைமார் | இளமுலைகளை |
| திரு | அழகிய |
| வேல் காக்க | வேலானது காத்தருள வேண்டும் |
முழுப் பொருள்:
மார்பை இரத்னங்கள் பதித்த கூர்மையான வேலானது காத்தருள வேண்டும். மார்போடு சேர்ந்துள்ள இளமுலைகளை அழகிய வேலானது காத்தருள வேண்டும்.
வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க!
பிடரிக ளிரண்டும் பெருவேல் காக்க!
சொல்லுக்குச் சொல் விளக்கம்:
| சொல் | விளக்கம் |
|---|---|
| வடி வேல் | வடித்தெடுக்கப்பட்ட வேலானது |
| இரு தோள் | இரண்டு தோள்களையும் |
| வளம் பெற | சிறப்படையும் படி |
| காக்க | காத்தருள வேண்டும் |
| பிடரிகள் இரண்டும் | இரண்டு பிடரிகளையும் |
| பெரு வேல் | பெருமை வாய்ந்த வேலாயுதமானது |
| காக்க | காத்தருள வேண்டும் |
முழுப் பொருள்:
வடித்தெடுக்கப்பட்ட வேலானது இரண்டு தோள்களையும் சிறப்படையும் படி காத்தருள வேண்டும். இரண்டு பிடரிகளையும் பெருமை வாய்ந்த வேலாயுதமானது காத்தருள வேண்டும்.
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க!
பழுபதி னாறும் பருவேல் காக்க!
சொல்லுக்குச் சொல் விளக்கம்:
| சொல் | விளக்கம் |
|---|---|
| முதுகை | முதுகுப் புறத்தினை |
| அழகுடன் | சிறப்பாக |
| அருள் வேல் | கருணை பொருந்திய வேலானது |
| காக்க | காத்தருள வேண்டும் |
| பழு | விலா எலும்புகள் |
| பதினாறும் | பதினாறினையும் |
| பரு வேல் | பெரிய வேல் |
| காக்க | காத்தருள வேண்டும் |
முழுப் பொருள்:
முதுகுப் புறத்தினை சிறப்பாக கருணை பொருந்திய வேலானது காத்தருள வேண்டும். விலா எலும்புகள் பதினாறினையும் பெரிய வேல் காத்தருள வேண்டும்.
வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க!
சிற்றிடை யழகுறச் செவ்வேல் காக்க!
சொல்லுக்குச் சொல் விளக்கம்:
| சொல் | விளக்கம் |
|---|---|
| வெற்றி வேல் | வெற்றியையுடைய வேலாயுதமானது |
| வயிற்றை விளங்க | சிறப்புற விளங்குமாறு வயிற்றை |
| காக்க | காத்தருள வேண்டும் |
| சிறு இடை | சிறிய இடையை |
| அழகு உற | அழகு சேர |
| செவ்வேல் | செம்மை கொண்ட வேல் |
| காக்க | காத்தருள வேண்டும் |
முழுப் பொருள்:
வெற்றியையுடைய வேலாயுதமானது சிறப்புற விளங்குமாறு வயிற்றை காத்தருள வேண்டும். சிறிய இடையை அழகு சேர செம்மை கொண்ட வேல் காத்தருள வேண்டும்.
நாணாங் கயிற்றை நல்வேல் காக்க!
ஆண்குறி இரண்டும் அயில்வேல் காக்க!
சொல்லுக்குச் சொல் விளக்கம்:
| சொல் | விளக்கம் |
|---|---|
| நாண் ஆம் கயிற்றை | நரம்பாகிய கயிற்றை |
| நல் வேல் | நன்மையை அருளும் வேலானது |
| காக்க | காத்தருள வேண்டும் |
| ஆண்குறி இரண்டும் | பீஜங்கள் இரண்டையும் |
| அயில் வேல் | கூர்மையாகிய வேலானது |
| காக்க | காத்தருள வேண்டும் |
முழுப் பொருள்:
நரம்பாகிய கயிற்றை நன்மையை அருளும் வேலானது காத்தருள வேண்டும். பீஜங்கள் இரண்டையும் கூர்மையாகிய வேலானது காத்தருள வேண்டும்.
பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க!
வட்டக் குதத்தை வடிவேல் காக்க!
சொல்லுக்குச் சொல் விளக்கம்:
| சொல் | விளக்கம் |
|---|---|
| பிட்டம் இரண்டும் | இரண்டு ஆசன பக்கங்களையும் |
| பெரு வேல் | பெருமை வாய்ந்த வேலானது |
| காக்க | காத்தருள வேண்டும்! |
| வட்ட | வட்ட வடிவத்துடன் கூடிய |
| குதத்தை | ஆசன துவாரத்தை |
| வடி வேல் | வலிமை பொருந்திய வேலானது |
| காக்க | காத்தருள வேண்டும்! |
முழுப் பொருள்:
இரண்டு ஆசன பக்கங்களையும் பெருமை வாய்ந்த வேலானது காத்தருள வேண்டும்! வட்ட வடிவத்துடன் கூடிய ஆசன துவாரத்தை வலிமை பொருந்திய வேலானது காத்தருள வேண்டும்!
பணைத்தொடை இரண்டும் பருவேல் காக்க!
கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க!
சொல்லுக்குச் சொல் விளக்கம்:
| சொல் | விளக்கம் |
|---|---|
| பணை | திரண்ட |
| தொடை இரண்டும் | இரண்டு தொடைகளையும் |
| பரு வேல் | வலிமை வாய்ந்த வேல் |
| காக்க | காத்தருள வேண்டும் |
| கணைக்கால் | இரண்டு கணைக்கால்களையும் |
| முழந்தாள் | இரண்டு முழந்தாள்களையும் |
| கதிர் | ஒளி பொருந்திய |
| வேல் | வேலாயுதமானது |
| காக்க | காத்தருள வேண்டும்! |
முழுப் பொருள்:
திரண்ட இரண்டு தொடைகளையும் வலிமை வாய்ந்த வேல் காத்தருள வேண்டும். இரண்டு கணைக்கால்களையும் இரண்டு முழந்தாள்களையும் ஒளி பொருந்திய வேலாயுதமானது காத்தருள வேண்டும்!
ஐவிரல் அடியிணை அருள்வேல் காக்க!
கைக ளிரண்டும் கருணைவேல் காக்க!
சொல்லுக்குச் சொல் விளக்கம்:
| சொல் | விளக்கம் |
|---|---|
| ஐவிரல் | ஐந்து விரல்களைக் கொண்ட |
| அடி இணை | இரண்டு பாதங்களையும் |
| அருள் வேல் | கருணை உடைய வேல் |
| காக்க | காத்தருள வேண்டும்! |
| கைகள் இரண்டும் | இரண்டு கைகளையும் |
| கருணை வேல் | அருள் மிக்க வேலாயுதமானது |
| காக்க | காத்தருள வேண்டும்! |
முழுப் பொருள்:
ஐந்து விரல்களைக் கொண்ட இரண்டு பாதங்களையும் கருணை உடைய வேல் காத்தருள வேண்டும்! இரண்டு கைகளையும் அருள் மிக்க வேலாயுதமானது காத்தருள வேண்டும்!
முன்கை யிரண்டும் முரண்வேல் காக்க!
பின்கை யிரண்டும் பின்னவள் இருக்க!
சொல்லுக்குச் சொல் விளக்கம்:
| சொல் | விளக்கம் |
|---|---|
| முன்கை இரண்டும் | இரண்டு முன்னங்கைகளையும் |
| முரண் வேல் | வலிமை பொருந்திய வேலானது |
| காக்க | காத்தருள வேண்டும் |
| பின்கை இரண்டும் | இரண்டு பின்னங்கைகளிலும் |
| பின்னவள் | திருமகள் |
| இருக்க | வாசம் செய்யுமாறு அருள வேண்டும் |
முழுப் பொருள்:
இரண்டு முன்னங்கைகளையும் வலிமை பொருந்திய வேலானது காத்தருள வேண்டும். இரண்டு பின்னங்கைகளிலும் திருமகள் வாசம் செய்யுமாறு அருள வேண்டும்.
நாவில் சரஸ்வதி நற்றுணை யாக!
நாபிக் கமலம் நல்வேல் காக்க!
சொல்லுக்குச் சொல் விளக்கம்:
| சொல் | விளக்கம் |
|---|---|
| நாவில் | நாக்கில் |
| சரஸ்வதி | கலைமகள் |
| நல் துணை ஆக | நல்ல துணை ஆக இருக்க அருள் செய்ய வேண்டும் |
| நாபிக் கமலம் | உந்தித் தாமரையை |
| நல் வேல் | நன்மை அருளும் வேலானது |
| காக்க | காத்தருள வேண்டும்! |
முழுப் பொருள்:
நாக்கில் கலைமகள் நல்ல துணை ஆக இருக்க அருள் செய்ய வேண்டும். உந்தித் தாமரையை நன்மை அருளும் வேலானது காத்தருள வேண்டும்!
முப்பால் நாடியை முனைவேல் காக்க!
எப்பொழு தும்எனை எதிர்வேல் காக்க!
சொல்லுக்குச் சொல் விளக்கம்:
| சொல் | விளக்கம் |
|---|---|
| முப்பால் நாடியை | மூன்று பிரிவான நாடிகளை |
| முனை வேல் | கூர்மை பொருந்திய வேலானது |
| காக்க | காத்தருள வேண்டும் |
| எனை எப்பொழுதும் | அடியேனாகிய என்னை எந்தக் காலத்திலும் |
| எதிர் வேல் | பகைவர்களை எதிர்த்து நின்று போரிடும் வேலானது |
| காக்க | காத்தருள வேண்டும் |
முழுப் பொருள்:
மூன்று பிரிவான நாடிகளை கூர்மை பொருந்திய வேலானது காத்தருள வேண்டும். அடியேனாகிய என்னை எந்தக் காலத்திலும் பகைவர்களை எதிர்த்து நின்று போரிடும் வேலானது காத்தருள வேண்டும்.
அடியேன் வசனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனகவேல் காக்க!
சொல்லுக்குச் சொல் விளக்கம்:
| சொல் | விளக்கம் |
|---|---|
| அடியேன் வசனம் | எனது வார்த்தையானது |
| அசைவு உள நேரம் | (என்னைக் காத்தருள் என்று வேண்டி) நாக்கு அசைய வெளிப்படும் போது |
| கனக வேல் | பொன்னாலான வேலானது |
| கடுக வந்து | விரைந்து வந்து |
| காக்க | காத்தருள வேண்டும் |
முழுப் பொருள்:
எனது வார்த்தையானது என்னைக் காத்தருள் என்று வேண்டி நாக்கு அசைய வெளிப்படும் போது, பொன்னாலான வேலானது விரைந்து வந்து காத்தருள வேண்டும்.
வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க
அரையிருள் தன்னில் அனையவேல் காக்க
சொல்லுக்குச் சொல் விளக்கம்:
| சொல் | விளக்கம் |
|---|---|
| வரும் பகல் தன்னில் | இருள் நீங்கிப் பகல் நேரம் வரும் போதெல்லாம் |
| வச்சிர வேல் | வைர வேலானது |
| காக்க | காத்தருள வேண்டும் |
| அரை இருள் தன்னில் | பாதி இராத்திரியில் |
| அனைய வேல் | அத்தகைய வைரம் பாய்ந்த வேலானது |
| காக்க | காத்தருள வேண்டும் |
முழுப் பொருள்:
இருள் நீங்கிப் பகல் நேரம் வரும் போதெல்லாம் வைர வேலானது காத்தருள வேண்டும். பாதி இராத்திரியில் அத்தகைய வைரம் பாய்ந்த வேலானது காத்தருள வேண்டும்.
ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க!
தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க!
சொல்லுக்குச் சொல் விளக்கம்:
| சொல் | விளக்கம் |
|---|---|
| ஏமத்தில் | முன்னிரவு நேரத்திலும் |
| சாமத்தில் | நடுராத்திரி நேரத்திலும் |
| எதிர் வேல் | பகைவர்களை எதிர்த்து நின்று போரிடும் வேலானது |
| காக்க | காத்தருள வேண்டும்! |
| தாமதம் நீக்கி | தாமதத்தை அகற்றி |
| சதுர் வேல் | அறிவு சிறந்த வேலானது |
| காக்க | காத்தருள வேண்டும்! |
முழுப் பொருள்:
முன்னிரவு நேரத்திலும் நடுராத்திரி நேரத்திலும் பகைவர்களை எதிர்த்து நின்று போரிடும் வேலானது காத்தருள வேண்டும்! தாமதத்தை அகற்றி அறிவு சிறந்த வேலானது காத்தருள வேண்டும்!
காக்க காக்க கனகவேல் காக்க!
நோக்க நோக்க நொடியில் நோக்க!
சொல்லுக்குச் சொல் விளக்கம்:
| சொல் | விளக்கம் |
|---|---|
| நொடியில் | ஒரு இமைப்பொழுதில் |
| கனக வேல் | பொன்னாலான வேலானது |
| காக்க காக்க காக்க | காத்தருள வேண்டும்! காத்தருள வேண்டும்! காத்தருள வேண்டும்! |
| நோக்க நோக்க நோக்க | நோக்கி அருள் செய்ய வேண்டும்! நோக்கி அருள் செய்ய வேண்டும்! நோக்கி அருள் செய்ய வேண்டும்! |
முழுப் பொருள்:
ஒரு இமைப்பொழுதில் பொன்னாலான வேலானது காத்தருள வேண்டும்! காத்தருள வேண்டும்! காத்தருள வேண்டும்! நோக்கி அருள் செய்ய வேண்டும்! நோக்கி அருள் செய்ய வேண்டும்! நோக்கி அருள் செய்ய வேண்டும்!
தாக்க தாக்க தடையறக் தாக்க!
பார்க்க! பார்க்க! பாவம் பொடிபட
சொல்லுக்குச் சொல் விளக்கம்:
| சொல் | விளக்கம் |
|---|---|
| பாவம் | அடியேனின் பாவங்கள் |
| பொடி பட | தூளாகி ஒழிய |
| பார்க்க பார்க்க | நோக்கி அருள் செய்ய வேண்டும்! நோக்கி அருள் செய்ய வேண்டும்! |
| தடை அற | தடை இன்றி |
| தாக்க தாக்க தாக்க | (பாவங்களையெல்லாம்) அடித்து விலக்கி அருள் செய்ய வேண்டும்! அடித்து விலக்கி அருள் செய்ய வேண்டும்! அடித்து விலக்கி அருள் செய்ய வேண்டும்! |
முழுப் பொருள்:
அடியேனின் பாவங்கள் தூளாகி ஒழிய நோக்கி அருள் செய்ய வேண்டும்! நோக்கி அருள் செய்ய வேண்டும்! தடை இன்றி பாவங்களையெல்லாம் அடித்து விலக்கி அருள் செய்ய வேண்டும்! அடித்து விலக்கி அருள் செய்ய வேண்டும்! அடித்து விலக்கி அருள் செய்ய வேண்டும்!
பில்லி சூனியம் பெரும்பகை அகல
வல்ல பூதம், வலாட்டிகப் பேய்கள்,
அல்லற் படுத்தும் அடங்கா முனியும்,
பிள்ளைகள் தின்னும் புழைக்கடை முனியும்,
கொள்ளிவாய்ப் பேய்களும், குறளைப் பேய்களும்,
பெண்களைத் தொடரும் பிரமராட் சதரும்
அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட
இரிசிகாட் டேரி இத்துன்ப சேனையும்
சொல்லுக்குச் சொல் விளக்கம்:
| சொல் | விளக்கம் |
|---|---|
| பில்லி சூனியம் | எதிரிகள் ஏவுகின்ற பில்லிப் பேயும் சூனியமும் |
| பெரும் பகை | பெரிய பகைவர்களும் |
| அகல | (என் முன் நிற்காமல்) நீங்கி ஓடவும் |
| அடியனைக் கண்டால் | (வேலினை வணங்குகின்ற) என்னைப் பார்த்தவுடன் |
| வல்ல பூதம் | வலிமை வாய்ந்த பூதங்களும் |
| வலாஷ்டிகப் பேய்கள் | வல்லமை உடைய பிசாசுகளும் |
| அல்லல் படுத்தும் | துன்பப்படுத்துகின்ற |
| அடங்கா முனியும் | மந்திர தந்திரங்கள் எதற்கும் கட்டுப்படாத முனிகளும் |
| பிள்ளைகள் தின்னும் | பிள்ளைகளைப் பிடித்து உணவாகக் கொள்கின்ற |
| புழைக்கடை முனியும் | புறவாசல் முனியும் |
| கொள்ளி வாய் பேய்களும் | நெருப்பை வாயிலே கொண்டிருக்கும் பிசாசுகளும் |
| குறளைப் பேய்களும் | குட்டிப் பிசாசுகளும் |
| பெண்களைத் தொடரும் | பெண்களின் பின்னால் தொடர்ந்து வந்து தொல்லை கொடுக்கும் |
| பிரம ராக்ஷதரும் | பிரம்ம ராக்ஷசப் பேய்களும் |
| இரிசி | இரிசி என்ற ஒருவகைப் பெண் பேயும் |
| காட்டேரி | காட்டேரி என்ற துஷ்ட தேவதையும் |
| இத்துன்ப சேனையும் | மேற்கூறியவாறு துன்பத்தை உண்டாக்கும் பேய்ப்படைகளும் |
| அடியனைக் கண்டால் | அடியேனைப் பார்த்தவுடன் |
| அலறிக் கலங்கிட | அலறிக்கொண்டு கலங்கி ஓடவும் |
முழுப் பொருள்:
எதிரிகள் ஏவுகின்ற பில்லிப் பேயும் சூனியமும், பெரிய பகைவர்களும், வேலினை வணங்குகின்ற என்னைப் பார்த்தவுடன் என் முன் நிற்காமல் நீங்கி ஓடவும். வலிமை வாய்ந்த பூதங்களும், வல்லமை உடைய பிசாசுகளும், துன்பப்படுத்துகின்ற மந்திர தந்திரங்கள் எதற்கும் கட்டுப்படாத முனிகளும், பிள்ளைகளைப் பிடித்து உணவாகக் கொள்கின்ற புறவாசல் முனியும், நெருப்பை வாயிலே கொண்டிருக்கும் பிசாசுகளும், குட்டிப் பிசாசுகளும், பெண்களின் பின்னால் தொடர்ந்து வந்து தொல்லை கொடுக்கும் பிரம்ம ராக்ஷசப் பேய்களும், இரிசி என்ற ஒருவகைப் பெண் பேயும், காட்டேரி என்ற துஷ்ட தேவதையும், மேற்கூறியவாறு துன்பத்தை உண்டாக்கும் பேய்ப்படைகளும், அடியேனைப் பார்த்தவுடன் அலறிக்கொண்டு கலங்கி ஓடவும்.
எல்லிலும் இருட்டிலும் எதிர்படும் அண்ணரும்,
கனபூசை கொள்ளும் காளியோ டனைவரும்,
விட்டாங் காரரும், மிகுபல பேய்களும்,
தண்டியக் காரரும், சண்டா ளங்களும்
என்பெயர் சொல்லவும் இடிவிழுந் தோடிட
ஆனை யடியினில் அரும்பா வைகளும்
சொல்லுக்குச் சொல் விளக்கம்:
| சொல் | விளக்கம் |
|---|---|
| எல்லினும் | பகலிலும் |
| இருட்டிலும் | இரவிலும் |
| எதிர்படும் | எதிர்த்து வருகின்ற |
| அண்ணரும் | அண்ணர் என்ற தேவதைகளும் |
| கனம் | மிகுந்த |
| பூசை கொள்ளும் | பூஜைகளைப் பெற்றடையும் |
| காளியோடு | காளி தேவதையோடு |
| அனைவரும் | காளியைச் சேர்ந்த படைகளாகிய மற்ற தேவர்களும் |
| விட்டாங்காரரும் | விட்டாங்காரர் என்னும் ஒருவகைப் பூதங்களும் |
| மிகு பல பேய்களும் | இன்னும் மிகுந்த பலமுடைய பேய்களும் |
| தண்டியக்காரரும் | பல்லக்கில் வரும் பூதங்களும் |
| சண்டாளங்களும் | கீழ்த்தரமான பல செய்கைகளைச் செய்யும் பேய்களும் |
| ஆனை | யானையின் |
| அடியினில் | பாதத்திற்குக் கீழ் பூமியில் புதைக்கப்பட்ட |
| அரும் பாவைகளும் | (கண்ணில் தென்படுவதற்குக் கடினமான) பதுமைகளும் |
| என்பெயர் சொல்லவும் | முருகப்பெருமானின் அடியவனாகிய எனது பெயரைச் சொன்னவுடன் |
| இடி விழுந்து ஓடிட | பயந்து ஓடவும் |
முழுப் பொருள்:
பகலிலும் இரவிலும் எதிர்த்து வருகின்ற அண்ணர் என்ற தேவதைகளும், மிகுந்த பூஜைகளைப் பெற்றடையும் காளி தேவதையோடு காளியைச் சேர்ந்த படைகளாகிய மற்ற தேவர்களும், விட்டாங்காரர் என்னும் ஒருவகைப் பூதங்களும், இன்னும் மிகுந்த பலமுடைய பேய்களும், பல்லக்கில் வரும் பூதங்களும், கீழ்த்தரமான பல செய்கைகளைச் செய்யும் பேய்களும், யானையின் பாதத்திற்குக் கீழ் பூமியில் புதைக்கப்பட்ட (கண்ணில் தென்படுவதற்குக் கடினமான) பதுமைகளும், முருகப்பெருமானின் அடியவனாகிய எனது பெயரைச் சொன்னவுடன் பயந்து ஓடவும்.
பூனை மயிரும், பிள்ளைகள் என்பும்,
நகமும் மயிரும் நீள்முடி மண்டையும்,
பாவைக ளுடனே பலகல சத்துடன்
மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்,
ஒட்டியச் செருக்கும், ஒட்டியப் பாவையும்,
காசும் பணமும் காவுடன் சோறும்,
ஓதும்அஞ் சனமும், ஒருவழிப் போக்கும்,
அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட
சொல்லுக்குச் சொல் விளக்கம்:
| சொல் | விளக்கம் |
|---|---|
| பூனை மயிரும் | பூனையினுடைய ரோமமும் |
| பிள்ளைகள் என்பும் | பிள்ளைகள் எலும்பும் |
| நகமும் | நகங்களும் |
| மயிரும் | ரோமமும் |
| நீள் முடி | நீண்ட முடியை உடைய |
| மண்டையும் | தலையும் |
| பாவைகளுடனே | மரப்பதுமைகளும் |
| பல கலசத்துடன் | பலவிதமான மண்ணால் செய்யப்பட்ட கலசங்களும் |
| மனையில் புதைத்த | (எனக்குத் தீங்கு விளைவிக்கும் பொருட்டு) என் வீட்டில் புதைத்துவைத்த |
| வஞ்சனை தனையும் | மந்திர தந்திர மாயங்களும் |
| ஒட்டியச் செருக்கும் | மாந்திரீகம் அறிந்த எனது பகைவர்களின் கர்வமும் |
| ஒட்டியப் பாவையும் | மந்திரித்துச் செய்த மரப்பதுமையும் |
| காசும் பணமும் | தீய சக்திகளுக்குத் தட்சணையாகக் கொடுக்கும் ரத்தினங்களும் நாணயங்களும் |
| காவுடன் | ஆடு கோழி காவுடன் |
| சோறும் | உதிரத்தில் புரட்டிய சோறும் |
| ஓதும் | சொல்லுகின்ற |
| அஞ்சனமும் | எதிரிகள் கற்ற அஞ்சன வித்தையும் |
| ஒருவழிப் போக்கும் | பித்துப்பிடித்து ஒரே வழியாகப் போகச் செய்யும் மாய மந்திரமும் |
| அடியனைக் கண்டால் | அடியேனைப் பார்த்தவுடனே |
| அலைந்து | வருந்தி |
| குலைந்திட | அழியவும் |
முழுப் பொருள்:
பூனையினுடைய ரோமமும், பிள்ளைகள் எலும்பும், நகங்களும், ரோமமும், நீண்ட முடியை உடைய தலையும், மரப்பதுமைகளும், பலவிதமான மண்ணால் செய்யப்பட்ட கலசங்களும், எனக்குத் தீங்கு விளைவிக்கும் பொருட்டு என் வீட்டில் புதைத்துவைத்த மந்திர தந்திர மாயங்களும், மாந்திரீகம் அறிந்த எனது பகைவர்களின் கர்வமும், மந்திரித்துச் செய்த மரப்பதுமையும், தீய சக்திகளுக்குத் தட்சணையாகக் கொடுக்கும் ரத்தினங்களும் நாணயங்களும், ஆடு கோழி காவுடன் உதிரத்தில் புரட்டிய சோறும், சொல்லுகின்ற எதிரிகள் கற்ற அஞ்சன வித்தையும், பித்துப்பிடித்து ஒரே வழியாகப் போகச் செய்யும் மாய மந்திரமும், அடியேனைப் பார்த்தவுடனே வருந்தி அழியவும்.
மாற்றான் வஞ்சகர் வந்து வணங்கிட
காலதூ தாளெனைக் கண்டாற் கலங்கிட
அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட
வாய்விட் டலறி மதிகெட் டோட
படியினில் முட்டப் பாசக் கயிற்றால்
கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு!
சொல்லுக்குச் சொல் விளக்கம்:
| சொல் | விளக்கம் |
|---|---|
| மாற்றான் வஞ்சகர் | பகைவர்களும் வஞ்சகர்களும் |
| வந்து வணங்கிட | வந்து என்னிடம் அடிபணியவும் |
| கால தூதாள் | எமனுடைய தூதர்கள் |
| என்னைக் கண்டால் கலங்கிட | என்னைக் கண்டால் மனம் கலங்கவும் |
| அஞ்சி நடுங்கிட | வேலவனின் நாமத்தைக் கேட்டு பயந்து நடுநடுங்கவும் |
| அரண்டு | அந்தப் பயத்தின் காரணமாக வெருண்டு |
| புரண்டிட | கீழே விழுந்து புரளவும் |
| வாய்விட்டு அலறி | வாயைத் திறந்து கதறி |
| மதி கெட்டு | புத்தி கெட்டு |
| ஓட | ஓடவும் |
| படியினில் | பூமியில் |
| முட்ட | முட்டிக்கொள்ளவும் |
| பாசக் கயிற்றால் | பாசக்கயிற்றினாலே |
| கட்டு | கட்டியருளுக! |
| உடன் அங்கம் கதறிட கட்டு | உடனே உடல் பகுதிகள் அனைத்தும் கதறும்படிக்கு கட்டி அருள்வாயாக! |
முழுப் பொருள்:
பகைவர்களும் வஞ்சகர்களும் வந்து என்னிடம் அடிபணியவும். எமனுடைய தூதர்கள் என்னைக் கண்டால் மனம் கலங்கவும். வேலவனின் நாமத்தைக் கேட்டு பயந்து நடுநடுங்கவும். அந்தப் பயத்தின் காரணமாக வெருண்டு கீழே விழுந்து புரளவும். வாயைத் திறந்து கதறி புத்தி கெட்டு ஓடவும். பூமியில் முட்டிக்கொள்ளவும். பாசக்கயிற்றினாலே கட்டியருளுக! உடனே உடல் பகுதிகள் அனைத்தும் கதறும்படிக்கு கட்டி அருள்வாயாக!
கட்டி உருட்டு கால்கை முறிய
கட்டு! கட்டு! கதறிடக் கட்டு!
சொல்லுக்குச் சொல் விளக்கம்:
| சொல் | விளக்கம் |
|---|---|
| கால் கை முறிய | காலும் கையும் ஒடியவும் |
| கதறிட | அவர்கள் கதறும்படியாகவும் |
| கட்டு கட்டு கட்டு | பாசக்கயிற்றால் கட்டியருள்வாய்! கட்டியருள்வாய்! கட்டியருள்வாய்! |
| கட்டி | அவ்வாறு கட்டப்பட்ட அந்தப் பகைவர்களை |
| உருட்டு | கீழே உருட்டுவாயாக! |
முழுப் பொருள்:
காலும் கையும் ஒடியவும், அவர்கள் கதறும்படியாகவும் பாசக்கயிற்றால் கட்டியருள்வாய்! கட்டியருள்வாய்! கட்டியருள்வாய்! அவ்வாறு கட்டப்பட்ட அந்தப் பகைவர்களை கீழே உருட்டுவாயாக!
முட்டு! முட்டு! முழிகள் பிதுங்கிட
செக்கு! செக்கு! செதில்செதி லாக
சொல்லுக்குச் சொல் விளக்கம்:
| சொல் | விளக்கம் |
|---|---|
| முழிகள் பிதுங்கிட | கண்விழிகள் வெளியே பிதுங்கி வந்து வருத்த |
| முட்டு முட்டு | மோதுவாய்! மோதுவாய்! |
| செதில் செதிலாக | தேகங்கள் பட்டை பட்டையாய் உதிரும்படி |
| செக்கு செக்கு | அழிப்பாய்! அழிப்பாய்! |
முழுப் பொருள்:
கண்விழிகள் வெளியே பிதுங்கி வந்து வருத்த மோதுவாய்! மோதுவாய்! தேகங்கள் பட்டை பட்டையாய் உதிரும்படி அழிப்பாய்! அழிப்பாய்!
சொக்கு! சொக்கு! சூர்ப்பகைச் சொக்கு!
குத்து! குத்து! கூர்வடி வேலால்
சொல்லுக்குச் சொல் விளக்கம்:
| சொல் | விளக்கம் |
|---|---|
| சொக்கு சொக்கு | அழகனே! அழகனே! |
| சூர்ப்பகை | சூரர்களுக்குப் பகையாகி அவர்களை அழித்த |
| சொக்கு | அழகனே! |
| கூர் வடி வேலால் | கூரிய வடித்தெடுத்த வேலால் |
| குத்து குத்து | குத்தி அழிப்பாய்! குத்தி அழிப்பாய்! |
முழுப் பொருள்:
அழகனே! அழகனே! சூரர்களுக்குப் பகையாகி அவர்களை அழித்த அழகனே! கூரிய வடித்தெடுத்த வேலால் குத்தி அழிப்பாய்! குத்தி அழிப்பாய்!
பற்று! பற்று! பகலவன் தணலெரி!
தணலெரி! தணலெரி! தணலது வாக
சொல்லுக்குச் சொல் விளக்கம்:
| சொல் | விளக்கம் |
|---|---|
| பற்று பற்று | பற்றிடுவாய்! பற்றிடுவாய்! |
| பகலவன் | சூரியனிடதேயுள்ள |
| தணல் அதுவாக | தழலின் ரூபம் ஆகும்படி |
| தணல் எரி | கொளுந்துவிட்டு எரிப்பாய்! |
| தணல் எரி | கொளுந்துவிட்டு எரிப்பாய்! |
| தணல் எரி | கொளுந்துவிட்டு எரிப்பாய்! |
முழுப் பொருள்:
பற்றிடுவாய்! பற்றிடுவாய்! சூரியனிடதேயுள்ள தழலின் ரூபம் ஆகும்படி கொளுந்துவிட்டு எரிப்பாய்! கொளுந்துவிட்டு எரிப்பாய்! கொளுந்துவிட்டு எரிப்பாய்!
விடு!விடு! வேலை வெகுண்டது வோட
புலியும் நரியும் புன்னரி நாயும்
எலியும் கரடியும் இனித்தொடர்ந் தோட
தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம்
ஏறிய விஷங்கள் எளிதுடன் இறங்க
சொல்லுக்குச் சொல் விளக்கம்:
| சொல் | விளக்கம் |
|---|---|
| வேலை | வேலாயுதத்தை |
| விடு விடு | ஏவி விடுவாயாக! |
| புலியும் | என்னைத் தாக்க வந்த புலியும் |
| வெருண்டது ஓட | அஞ்சி ஓடவும் |
| நரியும் | பெரிய நரியும் |
| புல் நரியும் | சிறு நரியும் |
| நாயும் | நாய்களும் |
| எலியும் | எலிகளும் |
| கரடியும் | கரடியும் |
| இனி | இனிமேல் |
| தொடர்ந்து | பயத்தால் ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ந்து |
| ஓட | ஓடவும் |
| தேளும் பாம்பும் | தேள்களும் பாம்பும் |
| செய்யான் பூரான் | செய்யான் பூரான்களும் |
| கடிவு இட விஷங்கள் | கடித்த இடத்தில் தங்கிய விஷங்களும் |
| கடித்து உயர் அங்கம் ஏறிய விஷங்கள் | நச்சுப்பற்கள் கடித்துத் தலைவரை ஏறிய விஷங்களும் |
| எளிது உடன் இறங்க | எளிதாக சீக்கிரத்தில் இறங்கி விடவும் |
முழுப் பொருள்:
வேலாயுதத்தை ஏவி விடுவாயாக! என்னைத் தாக்க வந்த புலியும் அஞ்சி ஓடவும். பெரிய நரியும், சிறு நரியும், நாய்களும், எலிகளும், கரடியும் இனிமேல் பயத்தால் ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ந்து ஓடவும். தேள்களும் பாம்பும், செய்யான் பூரான்களும் கடித்த இடத்தில் தங்கிய விஷங்களும், நச்சுப்பற்கள் கடித்துத் தலைவரை ஏறிய விஷங்களும் எளிதாக சீக்கிரத்தில் இறங்கி விடவும்.
ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்
வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம்
சூலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு
குடைச்சல் சிலந்தி குடல்விப் பிருதி
பக்கப் பிளவை படர்தொடை வாழை
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
பற்குத் தரணை பருஅரை யாப்பும்
எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்
நில்லா தோட நீஎனக் கருள்வாய்
ஈரேழ் உலகமும் எனக்குற வாக
ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா
மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும்
சொல்லுக்குச் சொல் விளக்கம்:
| சொல் | விளக்கம் |
|---|---|
| ஒளிப்பும் | உரு மறைவும் |
| சுளுக்கும் | நரம்பு சுளுக்குதலும் |
| ஒருதலை நோயும் | ஒருபக்கத் தலைவலியும் |
| வாதம் | வாயுசம்பந்தமான வியாதியும் |
| சயித்தியம் | குளிர்நோயும் |
| வலிப்பு | இழுப்புநோயும் |
| பித்தம் | பித்தநோயும் |
| சூலை | சூலைநோயும் |
| சயம் | க்ஷயரோகமும் |
| குன்மம் | குன்மநோயும் |
| சொக்கு | சோர்வை உண்டாக்கும் |
| சிரங்கு | சிரங்குரோகமும் |
| குடைச்சல் | கைகால் குடைச்சலும் |
| சிலந்தி | சிலந்திக்கட்டியும் |
| குடல் விப்புருதி | குடலில் உண்டாகும் சிலந்திக்கட்டியும் |
| பக்கப்பிளவை | விலாப்புறங்களில் தோன்றும் பிளவையும் |
| படர் | பரவுகின்ற |
| தொடை வாழை | தொடைவாழை என்று சொல்லப்படும் கட்டியும் |
| கடுவன் | கடுவனும் |
| படுவன் | படுவன் என்னும் சிலந்தியும் |
| கைத்தாள் சிலந்தி | கைகால் சிலந்தியும் |
| பல் குத்து | பல் குத்து வலியும் |
| அரணை | பல் அரணையும் |
| பரு | பருக்கட்டிகளும் |
| அரையாப்பு | அரையாப்புக் கட்டியும் |
| எல்லாப் பிணியும் | மேற்கூறிய எல்லா வியாதிகளும் |
| என்றனைக் கண்டால் | என்னைக் கண்டவுடன் |
| நில்லாது | என்னிடத்தில் தங்கி இருக்காமல் |
| ஓட | நீங்கி ஒழிய |
| நீ | ஓ முருகக்கடவுளே! நீங்கள் |
| எனக்கு | அடியேனாகிய எனக்கு |
| அருள்வாய் | கருணை புரிவீராக! |
| ஈரேழு உலகமும் | பதினான்கு லோகங்களும் |
| எனக்கு | அடியேனாகிய என்னுடன் |
| உறவு ஆக | நட்புடன் இருக்க |
| ஆணும் பெண்ணும் | ஆண்களும் பெண்களும் |
| அனைவரும் | எல்லோரும் |
| மண் ஆள் | பூமியை ஆள்கின்ற |
| அரசரும் | மன்னர்களும் |
| எனக்காக மகிழ்ந்து | என் பொருட்டு சந்தோஷம் அடைந்து |
| உறவாகவும் | என்னுடன் தோழமை கொண்டிருக்கவும் |
முழுப் பொருள்:
உரு மறைவும், நரம்பு சுளுக்குதலும், ஒருபக்கத் தலைவலியும், வாயுசம்பந்தமான வியாதியும், குளிர்நோயும், இழுப்புநோயும், பித்தநோயும், சூலைநோயும், க்ஷயரோகமும், குன்மநோயும், சோர்வை உண்டாக்கும் சிரங்குரோகமும், கைகால் குடைச்சலும், சிலந்திக்கட்டியும், குடலில் உண்டாகும் சிலந்திக்கட்டியும், விலாப்புறங்களில் தோன்றும் பிளவையும், பரவுகின்ற தொடைவாழை என்று சொல்லப்படும் கட்டியும், கடுவனும், படுவன் என்னும் சிலந்தியும், கைகால் சிலந்தியும், பல் குத்து வலியும், பல் அரணையும், பருக்கட்டிகளும், அரையாப்புக் கட்டியும், மேற்கூறிய எல்லா வியாதிகளும் என்னைக் கண்டவுடன் என்னிடத்தில் தங்கி இருக்காமல் நீங்கி ஒழிய, ஓ முருகக்கடவுளே! நீங்கள் அடியேனாகிய எனக்கு கருணை புரிவீராக! பதினான்கு லோகங்களும் அடியேனாகிய என்னுடன் நட்புடன் இருக்க, ஆண்களும் பெண்களும் எல்லோரும், பூமியை ஆள்கின்ற மன்னர்களும் என் பொருட்டு சந்தோஷம் அடைந்து என்னுடன் தோழமை கொண்டிருக்கவும் அடியேனாகிய எனக்கு கருணை செய்வீராக!
உன்னைத் துதிக்க உன்திரு நாமம்
சரஹண பவனே! சைலொளி பவனே!
திரிபுர பவனே! திகழொளி பவனே!
பரிபுர பவனே! பவமொளி பவனே!
அரிதிரு மருகா! அமரா வதியைக்
காத்துத் தேவர்கள் கடும்சிறை விடுத்தாய்!
சொல்லுக்குச் சொல் விளக்கம்:
| சொல் | விளக்கம் |
|---|---|
| சரஹண பவனே | சரவணப் பொய்கையில் உதித்தவனே! |
| சைல் | மலைகளில் வீற்றிருக்கும் |
| ஒளி பவனே | ஒளிமயமான கடவுளே! |
| திரிபுர பவனே | திரிபுரத்தை அழித்த சிவபெருமானை ஒத்தவனே! |
| திகழ் | மின்னுகின்ற |
| ஒளி | ஒளியினை உடைய |
| பவனே | கடவுளே! |
| பரிபுர பவனே | பாதச் சிலம்பை அணிந்த மேன்மை உடையவனே! |
| பவம் | பிறவிப் பெருந்துயரை |
| ஒளி | தடுக்கின்ற |
| பவனே | சக்தியை உடையவனே! |
| அரி | திருமாலுக்கும் |
| திரு | மகாலட்சுமிக்கும் |
| மருகா | மருமகனே! |
| உன்னை | உன்னையும் |
| உன் திரு நாமம் | உன்னுடைய அழகிய திருநாமத்தையும் |
| துதிக்க | துதிசெய்த தேவர்களின் |
| அமராபதியை | தேவலோகத்தை |
| காத்து | ரட்சித்து |
| தேவர் | அமரர்களுடைய |
| கடும் சிறை | கடுமையான சிறைவாசத்தை |
| விடுத்தாய் | நீக்கி அவர்களை அச்சிறையிலிருந்து விடுதலை செய்தவனே! |
முழுப் பொருள்:
சரவணப் பொய்கையில் உதித்தவனே! மலைகளில் வீற்றிருக்கும் ஒளிமயமான கடவுளே! திரிபுரத்தை அழித்த சிவபெருமானை ஒத்தவனே! மின்னுகின்ற ஒளியினை உடைய கடவுளே! பாதச் சிலம்பை அணிந்த மேன்மை உடையவனே! பிறவிப் பெருந்துயரை தடுக்கின்ற சக்தியை உடையவனே! திருமாலுக்கும் மகாலட்சுமிக்கும் மருமகனே! உன்னையும் உன்னுடைய அழகிய திருநாமத்தையும் துதிசெய்த தேவர்களின் தேவலோகத்தை ரட்சித்து, அமரர்களுடைய கடுமையான சிறைவாசத்தை நீக்கி அவர்களை அச்சிறையிலிருந்து விடுதலை செய்தவனே!
கந்தா! குகனே! கதிர்வே லவனே!
கார்த்திகை மைந்தா! கடம்பா! கடம்பனை
இடும்பனை யழித்த இனியவேல் முருகா!
தணிகா சலனே! சங்கரன் புதல்வா!
சொல்லுக்குச் சொல் விளக்கம்:
| சொல் | விளக்கம் |
|---|---|
| கந்தா குகனே | கந்தக் கடவுளே! குகப்பெருமானே |
| கதிர் | ஒளிபொருந்திய |
| வேலவனே | வேற்படையை ஏந்தியவனே |
| கார்த்திகை மைந்தா | கார்த்திகை முதலிய நட்சத்திர மாதர்கள் வளர்த்த புத்திரனே |
| கடம்பா | கடப்பமலர் மாலையைத் தாங்கியவனே! |
| கடம்பனை இடும்பனை | கடம்பனையும் இடும்பனையும் |
| அழித்த | சம்ஹாரம் செய்த |
| இனிய வேல் முருகா | இன்பம் தருகின்ற வேலை ஏந்திய முருகப்பெருமானே! |
| தணிகாசலனே | திருத்தணிகை மலையில் எழுந்தருளி இருப்பவனே! |
| சங்கரன் புதல்வா | சிவபெருமானின் செல்வனே! |
முழுப் பொருள்:
கந்தக் கடவுளே! குகப்பெருமானே! ஒளிபொருந்திய வேற்படையை ஏந்தியவனே! கார்த்திகை முதலிய நட்சத்திர மாதர்கள் வளர்த்த புத்திரனே! கடப்பமலர் மாலையைத் தாங்கியவனே! கடம்பனையும் இடும்பனையும் சம்ஹாரம் செய்த இன்பம் தருகின்ற வேலை ஏந்திய முருகப்பெருமானே! திருத்தணிகை மலையில் எழுந்தருளி இருப்பவனே! சிவபெருமானின் செல்வனே!
கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா!
பழநிப் பதிவாழ் பால குமாரா!
சொல்லுக்குச் சொல் விளக்கம்:
| சொல் | விளக்கம் |
|---|---|
| கதிர்காமத்து உறை | கதிர்காமம் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி இருக்கின்ற |
| கதிர் வேல் முருகா | ஒளி வீசும் வேலை ஏந்திய முருகப்பெருமானே! |
| பழனிப் பதி வாழ் | பழனி என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி இருக்கின்ற |
| பால குமாரா! | பாலகனாகிய குமரக்கடவுளே! |
முழுப் பொருள்:
கதிர்காமம் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி இருக்கின்ற ஒளி வீசும் வேலை ஏந்திய முருகப்பெருமானே! பழனி என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி இருக்கின்ற பாலகனாகிய குமரக்கடவுளே!
ஆவினன் குடிவாழ் அழகிய வேலா!
செந்தின்மா மலையுறும் செங்கல்வ ராயா!
சொல்லுக்குச் சொல் விளக்கம்:
| சொல் | விளக்கம் |
|---|---|
| ஆவினன்குடி | திருவாவினன்குடி என்னும் திருத்தலத்தில் |
| வாழ் | வீற்றிருக்கின்ற |
| அழகிய வேலா | அழகிய வேலாயுதத்தை ஏந்தியவனே! |
| செந்தில் | திருச்செந்தூர் என்னும் திருத்தலத்தில் உள்ள |
| மா மலை உறும் | சிறப்புடைய மலையில் எழுந்தருளி இருக்கும் |
| செங்கல்வராயா | செங்கல்வராயனே! |
முழுப் பொருள்:
திருவாவினன்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கின்ற அழகிய வேலாயுதத்தை ஏந்தியவனே! திருச்செந்தூர் என்னும் திருத்தலத்தில் உள்ள சிறப்புடைய மலையில் எழுந்தருளி இருக்கும் செங்கல்வராயனே!
சமரா புரிவாழ் சண்முகத் தரசே!
காரார் குழலாள் கலைமகள் நன்றாய்
என்நா இருக்க யானுனைப் பாட
எனைத்தொடர்ந் திருக்கும் எந்தை முருகனை
சொல்லுக்குச் சொல் விளக்கம்:
| சொல் | விளக்கம் |
|---|---|
| சமராபுரி | சமராபுரி என்னும் திருத்தலத்தில் |
| வாழ் | எழுந்தருளி இருக்கின்ற |
| சண்முகத்து அரசே | சண்முகன் என்னும் திருநாமத்தைக் கொண்டு என்னை ஆள்பவனே! |
| கார் ஆர் | மேகத்தை ஒத்த |
| குழலாள் | கூந்தலை உடைய |
| கலைமகள் | சரசுவதியானவள் |
| நன்றாய் | ஞானம் சிறக்குமாறு |
| என் நா | எனது நாவில் |
| இருக்க | வீற்றிருக்க |
| யான் உனைப் பாட | அடியேன் உன் புகழைப் பாட |
| எனைத் தொடர்ந்து இருக்கும் | என்னைத் தொடர்ந்து வந்து எனக்குப் பக்கத்துணையாக நிற்கும் |
| எந்தை | என் தந்தையாகிய |
| முருகனை | முருகக் கடவுளே! |
முழுப் பொருள்:
சமராபுரி என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி இருக்கின்ற சண்முகன் என்னும் திருநாமத்தைக் கொண்டு என்னை ஆள்பவனே! மேகத்தை ஒத்த கூந்தலை உடைய சரசுவதியானவள் ஞானம் சிறக்குமாறு எனது நாவில் வீற்றிருக்க, அடியேன் உன் புகழைப் பாட, என்னைத் தொடர்ந்து வந்து எனக்குப் பக்கத்துணையாக நிற்கும் என் தந்தையாகிய முருகக் கடவுளே!
பாடினேன் ஆடினேன் பரவச மாக
ஆடினேன் நாடினென் ஆவினன் பூதியை
நேச முடன்யான் நெற்றியில் அணிய
பாச வினைகள் பற்றது நீங்கி
சொல்லுக்குச் சொல் விளக்கம்:
| சொல் | விளக்கம் |
|---|---|
| பாடினேன் | உன் புகழைப் பாடினேன் |
| பரவசமாக | மிகுந்த களிப்போடு என்னை மறந்து |
| ஆடினேன் | ஆனந்தக் கூத்து ஆடினேன் |
| நாடினேன் | தொடர்ந்து ஆடிக்கொண்டே இருந்தேன் |
| பாச | மாயமும் பற்றும் நிறைந்த |
| வினைகள் | செயல்களின் |
| பற்றது | தொடர்ச்சி |
| நீங்கி | விலகுமாறு |
| நேசமுடன் | அன்போடு |
| யான் | அடியேன் |
| ஆவினன் | சிவபெருமானின் |
| பூதியை | விபூதியை |
| நெற்றியில் அணிய | நெற்றியில் அணிந்துகொண்டு |
முழுப் பொருள்:
உன் புகழைப் பாடினேன்; மிகுந்த களிப்போடு என்னை மறந்து ஆனந்தக் கூத்து ஆடினேன்; தொடர்ந்து ஆடிக்கொண்டே இருந்தேன்; மாயமும் பற்றும் நிறைந்த செயல்களின் தொடர்ச்சி விலகுமாறு, அன்போடு அடியேன் சிவபெருமானின் விபூதியை நெற்றியில் அணிந்துகொண்டு.
உன்பதம் பெறவே உன்னரு ளாக
அன்புடன் இரக்ஷி! அன்னமுஞ் சொன்னமும்
மெத்தமெத் தாக வேலா யுதனார்
சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க!
சொல்லுக்குச் சொல் விளக்கம்:
| சொல் | விளக்கம் |
|---|---|
| உன் பதம் | தங்கள் திருவடியை |
| பெறவே | சரண் புகுந்து தஞ்சம் அடைய |
| உன் அருள் | உன்னுடைய கருணையானது |
| ஆக | என்மீது உண்டாகவும் |
| அன்னமும் | சோறும் |
| சொன்னமும் | பொன்னும் |
| மெத்த மெத்த | மிக மிக |
| ஆக | பெருகவும் |
| அன்புடன் | பிரியத்தோடு |
| இரக்ஷி | அருள் செய்து காப்பீராக! |
| வேலாயுதனார் | வேலாயுதபாணியே! |
| சித்தி பெற்று | விரும்பிய பொருள்கள் கைவரப் பெற்று |
| அடியேன் | அடியேனாகிய நான் |
| சிறப்புடன் | வளமுடன் |
| வாழ்க | வாழ்வேனாக! |
முழுப் பொருள்:
தங்கள் திருவடியை சரண் புகுந்து தஞ்சம் அடைய உன்னுடைய கருணையானது என்மீது உண்டாகவும், சோறும் பொன்னும் மிக மிக பெருகவும், பிரியத்தோடு அருள் செய்து காப்பீராக! வேலாயுதபாணியே! விரும்பிய பொருள்கள் கைவரப் பெற்று, அடியேனாகிய நான் வளமுடன் வாழ்வேனாக!
வாழ்க! வாழ்க! மயிலோன்! வாழ்க!
வாழ்க! வாழ்க! வடிவேல் வாழ்க!
சொல்லுக்குச் சொல் விளக்கம்:
| சொல் | விளக்கம் |
|---|---|
| மயிலோன் | மயில் வாகனத்தை உடைய முருகக்கடவுளே |
| வாழ்க | தங்கள் அருள் என்றும் இந்தப் பூமியில் வாழ்ந்திருப்பதாக! |
| வாழ்க வாழ்க | தங்கள் அருள் வாழ்க! தங்கள் அருள் வாழ்க! |
| வடிவேல் | தங்கள் திருக்கரத்தில் ஏந்தியுள்ள கூர்மையான வேலின் சக்தி |
| வாழ்க | இந்த பூலோகத்தில் எல்லாரையும் காத்திட எங்கெங்கும் நிறைந்து வாழ்வதாக! |
| வாழ்க வாழ்க | வேலின் சக்தி என்றென்றும் வாழ்வதாக! |
முழுப் பொருள்:
மயில் வாகனத்தை உடைய முருகக்கடவுளே, தங்கள் அருள் என்றும் இந்தப் பூமியில் வாழ்ந்திருப்பதாக! தங்கள் அருள் வாழ்க! தங்கள் அருள் வாழ்க! தங்கள் திருக்கரத்தில் ஏந்தியுள்ள கூர்மையான வேலின் சக்தி இந்த பூலோகத்தில் எல்லாரையும் காத்திட எங்கெங்கும் நிறைந்து வாழ்வதாக! வேலின் சக்தி என்றென்றும் வாழ்வதாக!
வாழ்க! வாழ்க! மலைக்குரு வாழ்க!
வாழ்க! வாழ்க! மலைக்குற மகளுடன்!
சொல்லுக்குச் சொல் விளக்கம்:
| சொல் | விளக்கம் |
|---|---|
| மலை | மலைகளில் விரும்பி வசிக்கின்ற |
| குரு | எமது குருவாகிய முருகப்பிரானுடைய |
| வாழ்க வாழ்க வாழ்க | அருள் வாழ்வதாக! |
| மலை | மலைநாட்டில் வளர்ந்த |
| குறமகளுடன் | வள்ளியம்மையாரோடு பக்தர்களுக்குக் காட்சியளிக்கும் |
| வாழ்க வாழ்க | உமது அருள் வாழ்வதாக! |
முழுப் பொருள்:
மலைகளில் விரும்பி வசிக்கின்ற எமது குருவாகிய முருகப்பிரானுடைய அருள் வாழ்வதாக! மலைநாட்டில் வளர்ந்த வள்ளியம்மையாரோடு பக்தர்களுக்குக் காட்சியளிக்கும் உமது அருள் வாழ்வதாக!
வாழ்க! வாழ்க! வாரணத் துவசம்,
வாழ்க! வாழ்க!என் வறுமைகள் நீங்க
சொல்லுக்குச் சொல் விளக்கம்:
| சொல் | விளக்கம் |
|---|---|
| வாரண | சேவலாகிய |
| துவசம் | உமது கொடியின் |
| வாழ்க வாழ்க வாழ்க வாழ்க | புகழ் வாழ்க! |
| என் வறுமை நீங்க | (உமது கொடியைத் தியானிக்கும்) எனது வறுமை தொலைவதாக! |
முழுப் பொருள்:
சேவலாகிய உமது கொடியின் புகழ் வாழ்க! உமது கொடியைத் தியானிக்கும் எனது வறுமை தொலைவதாக!
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை அடியேன் எத்தனை செய்தால்
பெற்றவன் நீகுரு பொறுப்ப(து) உன்கடன்
பெற்றவள் குறமகள் பெற்றவ ளாமே
சொல்லுக்குச் சொல் விளக்கம்:
| சொல் | விளக்கம் |
|---|---|
| பெற்றவன் | என்னைப் பெற்ற தந்தை |
| நீ | முருகப்பிரானே! நீயே ஆகும் |
| குரு நீ | எனக்கு ஆசானும் நீயே |
| குறமகள் | உமது மனையாளாகிய குறவர் குடியில் வளர்ந்த வள்ளியம்மை |
| பெற்றவள் | இந்த உலகத்தோர் அனைவரையும் பெற்றெடுத்த தாய் ஆகையால் |
| பெற்றவள் ஆம் | என்னையும் பெற்ற அன்னையாவாள் (அதனால்) |
| அடியேன் | உமது அடியவனாகிய நான் |
| எத்தனை | எவ்வளவு |
| குறைகள் | குற்றமுள்ள செய்கைகளை |
| எத்தனை பிழைகள் | எவ்வளவு பிழையான செயல்களை |
| எத்தனை எத்தனை | எவ்வளவு எவ்வளவு |
| செய்தால் | செய்தாலும் |
| பொறுப்பது | அவற்றைப் பொறுத்துக் கொண்டு அருளுவது |
| உன் கடன் | உமது கடமையாகும் |
முழுப் பொருள்:
என்னைப் பெற்ற தந்தை முருகப்பிரானே! நீயே ஆகும்; எனக்கு ஆசானும் நீயே; உமது மனையாளாகிய குறவர் குடியில் வளர்ந்த வள்ளியம்மை இந்த உலகத்தோர் அனைவரையும் பெற்றெடுத்த தாய் ஆகையால் என்னையும் பெற்ற அன்னையாவாள். அதனால் உமது அடியவனாகிய நான் எவ்வளவு குற்றமுள்ள செய்கைகளை, எவ்வளவு பிழையான செயல்களை, எவ்வளவு எவ்வளவு செய்தாலும், அவற்றைப் பொறுத்துக் கொண்டு அருளுவது உமது கடமையாகும்.
பிள்ளையென் றன்பாய்ப் பிரிய மளித்து
மைந்தனென் மீதுன் மனமகிழ்ந் தருளித்
தஞ்சமென் றடியர் தழைத்திட அருள்செய்
கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய
சொல்லுக்குச் சொல் விளக்கம்:
| சொல் | விளக்கம் |
|---|---|
| பிள்ளை என்று | நான் உமக்குப் பிள்ளை என்று |
| அன்பாய் | அன்போடு |
| மைந்தன் என் மீது | மகனாகிய என்மேல் |
| உன் மனம் | உமது திருவுள்ளம் |
| மகிழ்ந்து அருளி | மகிழ்ச்சி கொண்டு |
| பிரியம் | அடியேன் வேண்டி விரும்பிக் கேட்பனவற்றை |
| அளித்து | அடியேனுக்குக் கொடுத்து கருணை காட்டி |
| கந்தா | கந்தக் கடவுளாகிய உன் |
| சஷ்டி கவசம் | சஷ்டி கவசத்தை |
| விரும்பிய | விரும்பிப் படித்தவர்களுக்கும் |
| தஞ்சம் என்று | நீயே தஞ்சமென்று வந்தடைந்த |
| அடியர் | பக்தர்கள் |
| தழைத்திட | வளமுடன் வாழ |
| அருள் செய் | கருணை செய்வாயாக! |
முழுப் பொருள்:
நான் உமக்குப் பிள்ளை என்று அன்போடு, மகனாகிய என்மேல் உமது திருவுள்ளம் மகிழ்ச்சி கொண்டு, அடியேன் வேண்டி விரும்பிக் கேட்பனவற்றை அடியேனுக்குக் கொடுத்து கருணை காட்டி, கந்தக் கடவுளாகிய உன் சஷ்டி கவசத்தை விரும்பிப் படித்தவர்களுக்கும், நீயே தஞ்சமென்று வந்தடைந்த பக்தர்கள் வளமுடன் வாழ கருணை செய்வாயாக!
பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக்
காலையில் மாலையில் கருத்துடன் நாளும்
சொல்லுக்குச் சொல் விளக்கம்:
| சொல் | விளக்கம் |
|---|---|
| பாலன் | முருகப்பெருமானுடைய பிள்ளையாகிய |
| தேவராயன் | தேவராயன் என்னும் பெயரை உடைய அடியேன் |
| பகர்ந்ததை | சொல்லிய 'கந்த சஷ்டி கவசம்' என்னும் இந்தத் துதிப்பாடலை |
| நாளும் | தினந்தோறும் |
| கருத்துடன் | 'தீமைகள் விலகி நன்மை வாய்க்கவேண்டும்' என்னும் எண்ணத்துடன் |
| காலையில் | காலைப் பொழுதிலும் |
| மாலையில் | மாலைப்பொழுதிலும் |
முழுப் பொருள்:
முருகப்பெருமானுடைய பிள்ளையாகிய தேவராயன் என்னும் பெயரை உடைய அடியேன் சொல்லிய 'கந்த சஷ்டி கவசம்' என்னும் இந்தத் துதிப்பாடலை, தினந்தோறும் 'தீமைகள் விலகி நன்மை வாய்க்கவேண்டும்' என்னும் எண்ணத்துடன் காலைப் பொழுதிலும் மாலைப்பொழுதிலும்.
ஆசா ரத்துடன் அங்கந் துலக்கி
நேச முடன்ஒரு நினைவது வாகிக்
கந்தர் சஷ்டிக் கவசம் இதனைச்
சிந்தை கலங்காது தியானிப் பவர்கள்
சொல்லுக்குச் சொல் விளக்கம்:
| சொல் | விளக்கம் |
|---|---|
| ஆசாரத்துடன் | பக்தி ஒழுக்கத்துடன் |
| அங்கம் | உடலை |
| துலக்கி | தூய்மைபடுத்திக் கொண்டு |
| நேசமுடன் | அன்புடன் |
| ஒரு | ஒரே |
| நினைவது ஆகி | நினைப்போடு |
| கந்தர் சஷ்டி கவசம் | கந்தக் கடவுளின் சஷ்டி கவச துதி ஆகிய |
| இதனை | இந்த நூலை |
| சிந்தை | மனம் |
| கலங்காது | கலக்கமடையாமல் |
| தியானிப்பவர்கள் | மனத்தால் துதிப்பவர்கள் |
முழுப் பொருள்:
பக்தி ஒழுக்கத்துடன் உடலை தூய்மைபடுத்திக் கொண்டு, அன்புடன் ஒரே நினைப்போடு, கந்தக் கடவுளின் சஷ்டி கவச துதி ஆகிய இந்த நூலை, மனம் கலக்கமடையாமல் நாள்தோறும் மனத்தால் துதிப்பவர்கள்.
ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு
ஓதியே ஜெபித்து உகந்துநீ றணிய
சொல்லுக்குச் சொல் விளக்கம்:
| சொல் | விளக்கம் |
|---|---|
| ஒரு நாள் | ஒரு தினத்திற்கு |
| முப்பத்தாறு உருக் கொண்டு | முப்பத்தாறு முறை முருகனின் திருநாமங்களை |
| ஓதி | கூறி |
| ஜெபித்து | ஜெபம் செய்து |
| உகந்து | மகிழ்ச்சியுடன் |
| நீறு அணிய | விபூதியைத் தரித்துக் குமரக்கடவுளை வணங்கித் துதித்தால் |
முழுப் பொருள்:
ஒரு தினத்திற்கு முப்பத்தாறு முறை முருகனின் திருநாமங்களை கூறி, ஜெபம் செய்து, மகிழ்ச்சியுடன் விபூதியைத் தரித்துக் குமரக்கடவுளை வணங்கித் துதித்தால்.
அஷ்டதிக் குள்ளோர் அடங்கலும் வசமாய்த்
திசைமன்ன ரெண்மர் செயல(து) அருளுவர்
சொல்லுக்குச் சொல் விளக்கம்:
| சொல் | விளக்கம் |
|---|---|
| அஷ்டதிக்கு உள்ளோர் | உலகத்திலே எட்டுத் திசையிலும் உள்ளவர்கள் |
| அடங்கலும் | அனைவரும் |
| வசமாய் | தனக்கு வசப்படுவார்கள் |
| திசை மன்னர் | திசைகள் எட்டிற்கும் தலைவர்களாகிய தேவர்கள் |
| எண்மர் | எட்டு பேரும் |
| செயலது அருளுவர் | தங்கள் அருளைப் பொழியும் நலன்களைத் தருவார்கள் |
முழுப் பொருள்:
உலகத்திலே எட்டுத் திசையிலும் உள்ளவர்கள் அனைவரும் தனக்கு வசப்படுவார்கள்; திசைகள் எட்டிற்கும் தலைவர்களாகிய தேவர்கள் எட்டு பேரும் தங்கள் அருளைப் பொழியும் நலன்களைத் தருவார்கள்.
மாற்றல ரல்லாம் வந்து வணங்குவர்;
நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும்
சொல்லுக்குச் சொல் விளக்கம்:
| சொல் | விளக்கம் |
|---|---|
| மாற்றலர் எல்லாம் | எதிரிகள் எல்லாம் |
| வந்து | தாமே வலிய வந்து |
| வணங்குவர் | பணிந்து எழுவார்கள் |
| நவகோள் | நவ கிரகங்களும் |
| மகிழ்ந்து | சந்தோஷம் கொண்டு |
| நன்மை அளித்திடும் | நன்மைகளைத் தரும் |
முழுப் பொருள்:
எதிரிகள் எல்லாம் தாமே வலிய வந்து பணிந்து எழுவார்கள்; நவ கிரகங்களும் சந்தோஷம் கொண்டு நன்மைகளைத் தரும்.
நவமத னெனவும் நல்லெழில் பெறுவர்;
எந்த நாளும்ஈ ரெட்டாய் வாழ்வார்
சொல்லுக்குச் சொல் விளக்கம்:
| சொல் | விளக்கம் |
|---|---|
| நவம் | புதுப்பொலிவுடன் |
| மதன் எனவும் | மன்மதன் என்று புகழும் அளவிற்கு |
| நல் எழில் | சிறந்த அழகை |
| பெறுவர் | பெறுவார்கள் |
| எந்த நாளும் | எப்பொழுதும் |
| ஈரெட்டா | பதினாறு வயது உடையவர்களாகி |
| வாழ்வர் | வாழ்ந்திருப்பார்கள் |
முழுப் பொருள்:
புதுப்பொலிவுடன் மன்மதன் என்று புகழும் அளவிற்கு சிறந்த அழகை பெறுவார்கள்; எப்பொழுதும் பதினாறு வயது உடையவர்களாகி வாழ்ந்திருப்பார்கள்.
கந்தர்கை வேலாம் கவசத் தடியை
வழியாய்க் காண மெய்யாய் விளங்கும்
சொல்லுக்குச் சொல் விளக்கம்:
| சொல் | விளக்கம் |
|---|---|
| கந்தர் கை வேலாம் | முருகர் கையில் இருக்கும் வேலைப் போன்ற |
| கவசத்து அடியை | இந்தக் கவசத்தில் இருக்கும் பாட்டின் அடியை |
| வழியாய்க் காண | முறைப்படி கருத்துடன் கவனித்துப் பார்க்க |
| மெய்யாய் விளங்கும் | உண்மையின் வடிவாக முருகப்பிரான் வந்து தோன்றுவார் |
முழுப் பொருள்:
முருகர் கையில் இருக்கும் வேலைப் போன்ற இந்தக் கவசத்தில் இருக்கும் பாட்டின் அடியை முறைப்படி கருத்துடன் கவனித்துப் பார்க்க, உண்மையின் வடிவாக முருகப்பிரான் வந்து தோன்றுவார்.
விழியாற் காண வெருண்டிடும் பேய்கள்;
பொல்லா தவரைப் பொடிபொடி யாக்கும்
சொல்லுக்குச் சொல் விளக்கம்:
| சொல் | விளக்கம் |
|---|---|
| விழியால் காண | கண்களால் பார்த்தவுடனே |
| பேய்கள் வெருண்டிடும் | பேய்கள் பயந்து ஓடிவிடும் |
| பொல்லாதவரை | எதிரிகளை |
| பொடி பொடி | துகள் துகளாக |
| ஆக்கும் | ஆக்கி, அவர்களின் ஆற்றலை அழித்துவிடும் |
முழுப் பொருள்:
கண்களால் பார்த்தவுடனே பேய்கள் பயந்து ஓடிவிடும்; எதிரிகளை துகள் துகளாக ஆக்கி, அவர்களின் ஆற்றலை அழித்துவிடும்.
நல்லோர் நினைவில் நடனம் புரியும்
சர்வ சத்துரு சங்கா ரத்தடி
சொல்லுக்குச் சொல் விளக்கம்:
| சொல் | விளக்கம் |
|---|---|
| அடி | 'கந்த சஷ்டி கவசம்' என்னும் இந்தப் பாட்டின் அடிகள் |
| நல்லோர் | நல்லவர்களுடைய |
| நினைவில் | எண்ணத்தில் |
| நடனம் | ஆனந்தக் கூத்து |
| புரியும் | செய்யும் |
| சர்வ சத்துரு | எல்லாப் பகைவர்களையும் |
| சங்காரத்து | சம்ஹாரம் செய்யும் |
| அடி | அடிகளாகவும் விளங்கும் |
முழுப் பொருள்:
'கந்த சஷ்டி கவசம்' என்னும் இந்தப் பாட்டின் அடிகள் நல்லவர்களுடைய எண்ணத்தில் ஆனந்தக் கூத்து செய்யும்; எல்லாப் பகைவர்களையும் சம்ஹாரம் செய்யும் அடிகளாகவும் விளங்கும்.
அறிந்தென துள்ளம் அஷ்டலட் சுமிகளில்
வீரலட் சுமிக்கு விருந்துண வாக
சொல்லுக்குச் சொல் விளக்கம்:
| சொல் | விளக்கம் |
|---|---|
| அறிந்து | மெய்ம்மையை உணர்ந்து தெளிந்த |
| எனது உள்ளம் | என்னுடைய மனம் |
| அஷ்டலட்சுமிகளில் | எட்டுவகை இலக்குமிகளில் |
| வீரலட்சுமிக்கு | வெற்றியைத் தரும் வீர லட்சுமிக்கு |
| விருந்து | புதுமையான |
| உணவாக | உணவாகும்படி (வீர லட்சுமி என் மனத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்குமாறு) |
முழுப் பொருள்:
மெய்ம்மையை உணர்ந்து தெளிந்த என்னுடைய மனம் எட்டுவகை இலக்குமிகளில் வெற்றியைத் தரும் வீர லட்சுமிக்கு புதுமையான உணவாகும்படி, வீர லட்சுமி என் மனத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்குமாறு.
சூரபத் மாவைத் துணித்தகை யதனால்
இருபத் தேழ்வர்க் குவந்தமு தளித்த
சொல்லுக்குச் சொல் விளக்கம்:
| சொல் | விளக்கம் |
|---|---|
| சூர பத்மாவை | சூர பத்மனை |
| துணித்த | வதைத்த |
| கை அதனால் | திருக்கையால் |
| இருபத்து ஏழ்வர்க்கு | இருபத்தேழு பேர்க்கு |
| உவந்து | மகிழுமாறு |
| அமுது அளித்த | தேவாமிருதத்தை வழங்கி அருள்செய்த |
முழுப் பொருள்:
சூர பத்மனை வதைத்த திருக்கையால் இருபத்தேழு பேர்க்கு மகிழுமாறு தேவாமிருதத்தை வழங்கி அருள்செய்த.
குருபரன் பழநிக் குன்றினி லிருக்கும்
சின்னக் குழந்தை சேவடி போற்ற
சொல்லுக்குச் சொல் விளக்கம்:
| சொல் | விளக்கம் |
|---|---|
| குருபரன் | சிவபெருமானுக்கு குருவாகி நின்று உபதேசித்த கந்தபிரானை |
| பழநிக் குன்றினில் | பழநி மலையில் |
| இருக்கும் | எழுந்தருளி இருக்கும் |
| சின்னக் குழந்தை | சிறிய பாலகனின் திருவுருவில் விளங்கும் முருகக்கடவுளின் |
| சேவடி போற்ற | சிவந்த பாதங்களைத் துதிக்க |
முழுப் பொருள்:
சிவபெருமானுக்கு குருவாகி நின்று உபதேசித்த கந்தபிரானை, பழநி மலையில் எழுந்தருளி இருக்கும் சிறிய பாலகனின் திருவுருவில் விளங்கும் முருகக்கடவுளின் சிவந்த பாதங்களைத் துதிக்க.
எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம்
மேவிய வடிவுறும் வேலவ! போற்றி!
சொல்லுக்குச் சொல் விளக்கம்:
| சொல் | விளக்கம் |
|---|---|
| எனை | என்னை |
| தடுத்து ஆள் கொள்ள | தகாத வழியில் போகாமல் தடுத்து ஆட்கொள்ளும்படி |
| என் தனது உள்ளம் | அடியேனுடைய மனத்தில் |
| மேவிய | எழுந்தருளி இருக்கும் |
| வடிவு உறும் | அழகிய |
| வேலவ | வேலாயுதபாணியே! |
| போற்றி | உனக்கு நமஸ்காரம்! |
முழுப் பொருள்:
என்னை தகாத வழியில் போகாமல் தடுத்து ஆட்கொள்ளும்படி, அடியேனுடைய மனத்தில் எழுந்தருளி இருக்கும் அழகிய வேலாயுதபாணியே! உனக்கு நமஸ்காரம்!
தேவர்கள் சேனா பதியே! போற்றி!
குறமகள் மனமகிழ் கோவே! போற்றி!
சொல்லுக்குச் சொல் விளக்கம்:
| சொல் | விளக்கம் |
|---|---|
| தேவர்கள் | தேவர்களின் |
| சேனாபதியே | படைத்தலைவனே! |
| போற்றி | உன்னைத் துதிக்கிறேன்! |
| குறமகள் | குறக்குலத்தில் வளர்ந்த வள்ளியம்மையாரின் |
| மனம் மகிழ் | திருவுள்ளத்தை மகிழ்விக்கின்ற |
| கோவே | அரசனே! |
| போற்றி | உன்னை வணங்குகிறேன்! |
முழுப் பொருள்:
தேவர்களின் படைத்தலைவனே! உன்னைத் துதிக்கிறேன்! குறக்குலத்தில் வளர்ந்த வள்ளியம்மையாரின் திருவுள்ளத்தை மகிழ்விக்கின்ற அரசனே! உன்னை வணங்குகிறேன்!
திறமிகு திவ்விய தேகா! போற்றி!
இடும்பா யுதனே! இடும்பா! போற்றி!
சொல்லுக்குச் சொல் விளக்கம்:
| சொல் | விளக்கம் |
|---|---|
| திறம் மிகு | வலிமை மிகுந்த |
| திவ்விய | தெய்வீகப் பொலிவு பொருந்திய |
| தேகா | திருமேனி உடையவனே! |
| போற்றி | உன்னை வணங்குகிறேன்! |
| இடும்ப | (தீயவர்களுக்குத்) துன்பத்தைக் கொடுக்கும் |
| ஆயுதனே | வேலாயுதத்தை உடையவனே! |
| இடும்பா | (அவ்வேலாயுதத்தைக் கொண்டு) பகைவர்களுக்கு துன்பம் செய்கின்றவனே! |
| போற்றி | உம்மைத் துதிக்கின்றேன்! |
முழுப் பொருள்:
வலிமை மிகுந்த தெய்வீகப் பொலிவு பொருந்திய திருமேனி உடையவனே! உன்னை வணங்குகிறேன்! தீயவர்களுக்குத் துன்பத்தைக் கொடுக்கும் வேலாயுதத்தை உடையவனே! அவ்வேலாயுதத்தைக் கொண்டு பகைவர்களுக்கு துன்பம் செய்கின்றவனே! உம்மைத் துதிக்கின்றேன்!
கடம்பா! போற்றி; கந்தா! போற்றி!
வெட்சி புனையும் வேலே! போற்றி!
சொல்லுக்குச் சொல் விளக்கம்:
| சொல் | விளக்கம் |
|---|---|
| கடம்பா போற்றி | கடம்பமலர் மாலையைத் தரித்தவனே, உன்னை வணங்குகிறேன்! |
| கந்தா போற்றி | கந்தக் கடவுளே! உன்னை வணங்குகிறேன்! |
| வெட்சி | வெட்சி மலரால் செய்யப்பட்ட மாலையை |
| புனையும் | அணிந்துகொள்கின்ற |
| வேலே | கந்தவேலே! |
| போற்றி | உன்னை வணங்குகிறேன்! |
முழுப் பொருள்:
கடம்பமலர் மாலையைத் தரித்தவனே, உன்னை வணங்குகிறேன்! கந்தக் கடவுளே! உன்னை வணங்குகிறேன்! வெட்சி மலரால் செய்யப்பட்ட மாலையை அணிந்துகொள்கின்ற கந்தவேலே! உன்னை வணங்குகிறேன்!
உயர்கிரி கனக சபைக்கோ ரரசே!
மயில்நட மிடுவோய்! மலரடி சரணம்!
சொல்லுக்குச் சொல் விளக்கம்:
| சொல் | விளக்கம் |
|---|---|
| உயர் | உயர்ந்து விளங்கும் |
| கிரி | கந்தகிரியில் இருக்கும் |
| கனகம் | பொன்னால் ஆன |
| சபைக்கு | சபாமண்டபத்துக்கு |
| ஓர் | ஒப்பற்ற |
| அரசே | நாயகனே |
| மயில் | மயில் வாகனத்தில் வந்து |
| நடம் இடுவோய் | நடனம் புரிபவனே |
| மலர் அடி | உனது தாமரை மலர் போன்ற திருவடிகள் |
| சரணம் | எனக்குத் தஞ்சமாம் |
முழுப் பொருள்:
உயர்ந்து விளங்கும் கந்தகிரியில் இருக்கும் பொன்னால் ஆன சபாமண்டபத்துக்கு ஒப்பற்ற நாயகனே! மயில் வாகனத்தில் வந்து நடனம் புரிபவனே! உனது தாமரை மலர் போன்ற திருவடிகள் எனக்குத் தஞ்சமாம்.
சரணம் சரணம் சரஹண பவஓம்!
சரணம் சரணம் சண்முகா! சரணம்!
சொல்லுக்குச் சொல் விளக்கம்:
| சொல் | விளக்கம் |
|---|---|
| சரவண பவ ஓம் | சரவணபவஓம் என்னும் மந்திரத்தின் பொருளே |
| சண்முகா | ஆறு முகங்களைக் கொண்டு அருள்பாலிப்பவனே! |
| சரணம் சரணம் சரணம் சரணம் | உனக்கு நமஸ்காரங்கள்! |
முழுப் பொருள்:
சரவணபவஓம் என்னும் மந்திரத்தின் பொருளே! ஆறு முகங்களைக் கொண்டு அருள்பாலிப்பவனே! உனக்கு நமஸ்காரங்கள்!
- இமயவரம்பன் கந்த சஷ்டி கவசம் – பதவுரை
- ஸ்லோகம் Kanda Sashti Kavacham
- பிடித்தவை கந்தர் சஷ்டி கவசம் - பொருள் விளக்கம்
- சிவபதி கந்தர் சஷ்டி கவசம் (கந்தர் கவசம்) மூலமும் விளக்கமும்
- தமிழ் இணையக் கல்விக்கழகம் TAMIL VIRTUAL ACADEMY கந்தர் சஷ்டி கவசம் மூலமும் மெய்ப்பொருள்
- சிவபதி கந்தர் கவசங்கள் (ஆறு கவசங்கள்) ஸ்ரீ தேவராய சுவாமிகள் அருளியவை
Disclaimer
The views expressed are personal and for informational purposes only.
Support This Content

anandraja13@slc



